200 நாட்களுக்கு பின் புதுச்சேரி உட்பட பல மாநிலங்களில் இன்று தியேட்டர்கள் திறப்பு… தமிழகத்தில் திரையில் சினிமா காண்பது எப்போது?
கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், புதுச்சேரி,கர்நாடகா, டில்லி, உ.பி. உள்ளிட்ட மாநிலங்களில் 200 நாட்களுக்குப் பின் இன்று திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் எப்போது தியேட்டர்கள் திறப்பு என்பது பற்றி வரும் திங்கட்கிழமை அறிவிப்பு வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக கிட்டத்தட்ட 7 மாதங்களாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இந்த ஊரடங்கு காலத்தில் பல்வேறு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதில் வர்த்தக நிறுவனங்கள் முதல் சினிமா படப்பிடிப்பு வரை தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் சினிமா தியேட்டர்களுக்கு மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் தியேட்டர்கள் திறப்பது எப்போது? என்ற எதிர்பார்ப்பு சினிமா ரசிகர்களிடமும், படப்பிடிப்பு முடிந்து திரையிட தயாராக இருந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரைத்துறையினர் அனைவரும் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி மத்திய அரசு அறிவித்த 5-ம் கட்ட தளர்வுகளில் வரும் 15-ந் தேதி தியேட்டர்களை திறக்க அனுமதிக்கப்பட்டது. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, தியேட்டருக்கு உள்ளே நுழையும் இடத்திலும், வெளியேறும் இடத்திலும், கைகளைச் சுத்தமாக்கக் கிருமிநாசினி வைக்கப்பட வேண்டும், நுழைவாசலில் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் அறிகுறி பார்த்துக் காய்ச்சல் இல்லாதவர்கள் மட்டுமே தியேட்டருக்குள் அனுமதிக்கப்பட வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளும் அறிவிக்கப்பட்டன.
இதன்படி திரையரங்குகளை திறப்பதற்கான ஆயத்த , ஆரம்ப கட்ட பணிகள் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் உள்ள தியேட்டர்களில் ஜரூராக நடைபெற்றன. புதுச்சேரி, கர்நாடகா, டில்லி, உ.பி., மே.வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இன்று தியேட்டர்கள் திறப்பு விழா கண்டன.
ஏழு மாதங்களுக்குப் பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் கூடினர்.மத்திய அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, 50 % இருக்கைகள், கிருமி நாசினி தெளிப்பு, ஆன்லைன் டிக்கெட் பதிவு, நொறுக்குத் தீனிகளுக்கு தடை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகளுடன் தியேட்டர்கள் இன்று களைகட்டின.
மத்திய அரசு அனுமதித்த போதும் தமிழகத்தில் இன்னும் தியேட்டர்களை திறப்பது பற்றி தமிழக அரசு இன்னும் முடிவெடுக்கவில்லை. இதனால் தியேட்டர்கள் திறப்பு எப்போது என்பது இன்னும் கேள்வியாகவே உள்ளது. இதற்கு பதிலளித்துள்ள தமிழக செய்தித் துறை அமைச்சர் கடம்பூர் ராஜ், வரும் திங்கட் கிழமை முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் முதல்வரைச் சந்திக்கவும் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.







