ஃபுல் போதையில்.. வாந்தியெடுத்து .. தட்டுத்தடுமாறி.. நிலை குலைந்த நிலையில்..? அரசு மருத்துவமனை ஊழியரின் அலங்கோலம்..! பரிதவித்த நோயாளிகள்!!!
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில், ரத்தப் பரிசோதனை பிரிவு ஊழியர் ஒருவர் பணியின் போதே ஃபுல் மப்பில் நிலை நடுமாறி.. தள்ளாடி .. வாந்தியெடுத்து அலங்கோலமாகக் கிடக்க, அவசரமாக ரத்த பரிசோதனை செய்ய வந்த நோயாளிகள் பலரும் அல்லாட நேர்ந்த அவலம் அரங்கேறியது.
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை… மாவட்டத்தின் தலைமை மருத்துவமனை என்பதால் 24 மணி நேரமும் சாதாரண நோயாளிகள் மட்டுமின்றி, விபத்தில் அடிபடுவோர், தீக்குளிப்பு, விஷம் குடித்தது போன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபட்டோர் என அவசர சிகிச்சைக்காக அவசரமாக மருத்துவமனைக்கு கொண்டு வரப்படுவர்.

இதனால் டாக்டர்கள், நர்சுகள் மட்டுமின்றி, எக்ஸ்ரே, ஸ்கேன், ரத்தப் பரிசோதனை என பல பிரிவுகளிலும் 24 மணி நேரமும் ஊழியர்களும் பணியில் இருப்பது வழக்கம். அதிலும் ரத்தப் பரிசோதனை பிரிவின் பணி மிகவும் அவசரமானதும் அவசியமானதும் கூட. ஏனெனில் அவசரப் பிரிவுக்கு கொண்டு வரப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு முன், குடித்திருக்கிறாரா? ஊசி செலுத்தும் கண்டிசனில் உள்ளாரா? என்பதையெல்லாம் ரத்தப் பரிசோதனை செய்த பின்பே உரிய சிகிச்சைகளை தொடர்வார்கள்.
இப்படி அதிமுக்கிய ரத்தப் பரிசோதனை பிரிவில் நேற்றிரவு பணியில் இருந்த சூர்யகாந்த் என்ற ஊழியர், குடிபோதையில் செய்த அட்டகாசம் சொல்லி மாளாது. ஃபுல் மப்பில் பணியில் இருந்த சூர்யகாந்த், தள்ளாடி கீழே விழுவதும், மல்லாக்க படுப்பதும், வாந்தி எடுப்பதுமாக இருந்துள்ளார். ரத்தப் பரிசோதனைக்காக ரத்த சாம்பிள்களுடன் வந்தவர்களை ஏகத்துக்கு திட்டுவதும், அசிங்கமாக சைகை செய்வதுமாக பீதியடைய செய்துள்ளார்.

இப்படி இரவு முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்த சூர்யகாந்த் யாருக்கும் ரத்த பரிசோதனை செய்யவில்லை. டேபிளில் சாம்பிள்கள், டாக்டர் சீட்டுகள் என மளமளவென குவிந்து விட்டது.
சூர்யகாந்தின் போதை அட்டூழியங்களை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நோயாளிகள், நோயாளிகளின் உறவினர்கள் அதிகாலை ஆனவுடன் பொங்கியெழுந்தனர். ஒட்டு மொத்தமாக கூக்குரல் கொடுக்க ஆரம்பித்தனர். ஆனாலும் மப்பு தெளியாத ஊழியர் சூர்யகாந்த் தன் பாட்டுக்கு தள்ளாடியபடியே சேரில் அமர்வதும், கீழே விழுவதுமாக இருந்துள்ளார்.

நோயாளிகள் தொடர்ந்து கூக்குரல் கொடுக்க, மருத்துவமனையின் பிற பிரிவு ஊழியர்கள் ரத்தப் பரிசோதனைப் பிரிவுக்கு ஓடோடி வந்துள்ளனர். போதையில் சூர்யகாந்த் நிலை தடுமாறி கிடப்பதைக் கண்டு, அவரை உடனே அங்கிருந்து அப்புறப் படுத்தினர். பின்னர் நோயாளிகளை சமாதானம் செய்ய முயன்ற போது, தாங்கள் ரத்தப் பரிசோதனைக்காக பட்ட அவஸ்தைகளைக் கூறி குமுறியது பரிதாபமாக இருந்தது.
“அரசு மருத்துவமனையில், அவசரமாக கொண்டு சேர்க்கப்படும் நோயாளிகள், விபத்தில் அடிபட்டோர், குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசில் சிக்கியோருக்கு அவசரமாக ரத்தப் பரிசோதனை செய்ய வேண்டிய பணியில் இருந்த ஊழியரே ஃபுல் மப்பில் தள்ளாட்டம் போட்ட விபரீதம் அரங்கேறியது பெரும் பரபரப்பாகி விட்டது”

இந்த விவகாரம் மருத்துவமனையின் உயர் பொறுப்பில் உள்ளவர்கள் வரை செல்ல, சம்பந்தப்பட்ட ஊழியர் சூர்யகாந்த் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனராம். இப்படிப்பட்ட போதை ஆசாமிகள் மீது உரிய நடவடிக்கை பாய்வதும் அவசியமானதே!
📱 Share on WhatsApp 𝕏 Share on X




