--- --:--:-- --

அரசியல் கட்சி தொடங்குவது எப்போது? இன்னும் பொறுமை காக்க சொல்லும் ரஜினி!!

b2e3533f-adb4-4ac4-ae13-bd1cb1362512

ரசியல் கட்சி தொடங்குவது பற்றி நான் உரிய முடிவெடுக்கிறேன்; அதுவரை ரசிகர்கள் பொறுத்திருங்கள் என இன்னும் பொறுமை காக்குமாறு இன்று நடந்த தனது மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் ரஜினி வேண்டுகோள் விடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

அரசியலில் குதிப்பதா? இல்லையா? என்பதில் பல வருடங்களாகவே தயக்கமும், போக்கும் காட்டி வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இன்று தமது மக்கள் மன்ற நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தை திடீரென கூட்டியிருந்தார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தனது அரசியல் நிலைப்பாடு குறித்த முக்கிய முடிவை ரஜினி அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவியது.

 

இப்படிப்பட்ட பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இன்று காலை 10 மணிக்கு சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தனது போயல் தோட்ட  வீட்டிலிருந்து ரசிகர்கள் புடைசூழ மண்டபத்திற்கு வந்தார் ரஜினி. அவர் வருவதற்கு முன்னரே மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகள் குவிந்திருந்தனர். கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நிர்வாகிகளுக்கு ஏற்கெனவே கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்ட நிலையில், மேடையில் ரஜினி மட்டுமே அமர்வதற்காக ஒற்றை நாற்காலி மட்டுமே போடப்பட்டிருந்தது.
கீழே மன்ற நிர்வாகிகள் அமர ஒரு நாற்காலிக்கு இடையே ஒரு நாற்காலி என இடைவெளி விடப்பட்டிருந்தது.

 

இதில் பங்கேற்ற ரஜினி, சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது, அரசியல் கட்சி தொடங்குவது குறித்தும், கட்சி தொடங்கினால் தேர்தல் களத்தை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும், தேர்தல் பிரசார பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்தும், கட்சியை எவ்வாறு மக்களிடம் முன்னெடுத்து செல்வது என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் தனித்தனியாக விவாதித்ததாக தெரிகிறது. மேலும் தற்போது கட்சி தொடங்கினால், தற்போதைய சூழலில் வரவேற்பு எப்படி இருக்கும்? எனவும் ரஜினிகாந்த் கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ரஜினி, மக்கள் மன்ற நிர்வாகிகள் சிலரின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை எனவும் ரஜினிகாந்த் அதிருப்தி தெரிவித்ததாகவும், தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர் கூட்ட முடிவில், அரசியல் கட்சி தொடங்குவது குறித்து தாம் உரிய முடிவெடுப்பேன் என்றும் அதுவரை மன்றத்தினர் பொறுத்திருங்கள் என்று ரஜினி கேட்டுக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்த ஆலோசனைக் கூட்டம் முடிவில் ரஜினி செய்தியாளர்களைச் சந்திப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் செய்தியாளர்களை சந்திக்காமல் ரஜினி விருட்டென காரில் ஏறி வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றார. வீடு திரும்பிய ரஜினி, அங்கு பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

 

மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடந்தது. அவங்களோட கருத்தை என் கிட்ட சொன்னாங்க, என்னுடைய பார்வையை நான் பகிர்ந்துக் கிட்டேன். நீங்க என்ன முடிவெடுத்தாலும் உங்கக் கூட இருப்போம்ன்னு சொன்னாங்க. நா எவ்ளோ சீக்கிரம் முடியுமோ அவ்ளோ சீக்கிரம் என் முடிவை தெரிவிக்கிறேன் என்றார். அதே வேளையில், அரசியல் கட்சி தொடர்பாக ரஜினி இன்னும் பொறுமை காக்கச் சொல்வது அவரது ரசிகர்களை பொறுமை இழக்கச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon