இன்று 2 மாவட்டங்களில் மழை..!
கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் புதன்கிழமை முதல் தமிழ்நாட்டில் வெப்பநிலை அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மன்னார் வளைகுடா முதல் மேற்கு விதர்பா வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் எனவும், தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மேலும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் கணித்துள்ளது. அதேபோல், வரும் புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே நிலவக்கூடும் எனவும், வெள்ளிக்கிழமை கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களிலும், சனிக்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது.
வரும் 26-ஆம் தேதி முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.





