ராகுல்காந்தி ஜனவரி 13-ந் தேதி தமிழகம் வருகை..!
ராகுல் காந்தி ஜனவரி 13ஆம் தேதி நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தனியார் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு, அவரை வரவேற்பதற்கும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை கவனிப்பதற்கும் 7 பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அமைத்துள்ளார். இந்த வருகையின் போது திமுக கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி நீடிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி திமுகவிடம் இருந்து 38 தொகுதிகளையும், 3 அமைச்சரவை பதவிகளையும் கோரியுள்ளது. ஆனால், ஆட்சியில் பங்கு கொடுப்பது குறித்து திமுகவினர் அதிருப்தி தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியின் இந்த கோரிக்கை விவாதமாகி உள்ளது.
மேலும், இந்த கூட்டணி பேச்சுவார்த்தை எதிர்பார்த்தபடி அமையவில்லை என்றால், தவெகவுடன் கூட்டணி அமைக்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சூசகமாக பேசி வருகின்றனர். தற்போது நடந்து வரும் ஜனநாயகன் பிரச்சனைக்காக விஜய்யே குரல் கொடுக்காத நிலையில், காங்கிரஸ் கட்சியும், அதன் எம்பிக்களும் அதிகளவில் குரல் எழுப்பி வருகின்றனர்.
ராகுல் காந்தியின் SIR போராட்டம் மற்றும் வாக்கு திருட்டு புகார் குறித்த வீடியோக்களை தமிழக காங்கிரஸ் கட்சியினர் அதிகம் பகிரவில்லை. ஆனால், விஜய்க்கு ஆதரவாக அதிகளவில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இதனால், முதல்வர் ஸ்டாலின் டெல்லி காங்கிரஸ் தலைமையுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.





