திகார் சிறையில் ப.சிதம்பத்துடன் ராகுல், பிரியங்கா சந்திப்பு!!
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் 3 மாதத்திற்கும் மேலாக திகார் சிறையில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்ககா காந்தி ஆகியோர் இன்று சந்தித்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், முதலில் சிபிஐயால் கடந்த ஆகஸ்ட் 21-ந் தேதி கைது செய்யப்பட்டார். சிபிஐ கஷ்டடியில் விசாரணை முடிந்து, செப்டம்பர் 5-ந் தேதி திகார் சிறையில் ப.சிதம்பரம் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கிடைத்த நிலையில், தொடர்ந்து அமலாக்கத்துறையும் அவரை கைது செய்தது. அமலாக்கத்துறை வழக்கில் பலமுறை டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டும் ப.சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைக்கவில்லை. இதனால் ஜாமீன் கேட்டீ உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததைத் தொடர்ந்து, இன்று விசாரணைக்கு வருகிறது.இந்நிலையில் அமலாக்கத்துறை வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தின் நீதிமன்றக் காவலும் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இதற்கிடையே, திகார் சிறையில் 3 மாதங்களாக அடைக்கப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் ஏற்கனவே சந்தித்து பேசினர். இன்று ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையிலும், உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு வர உள்ள நிலையிலும், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று காலை திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்து சிறிது நேரம் பேசிவிட்டு திரும்பினர்.






