--- --:--:-- --

சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை கிரண்பேடி ;புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி காட்டம்

rrkk

புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி, சர்வாதிகாரி போல் செயல்படுகிறார் என்றும், கிரண்பேடியை ஹிட்லரின் சகோதரி என்றும் அம்மாநில முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.

 

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல்வர் நாராயணசாமிக்கும், துணை நிலை ஆளுநராக உள்ள கிரண்பேடிக்கும் இடையே எப்போதும் ஏழாம் பொருத்தம் தான். கடந்த மூன்றரை வருடங்களுக்கும் மேலாகவே இருவருக்கும் இடையே அடிக்கடி முட்டலும் மோதலுமாகவே இருந்து வருகிறது.

 

புதுச்சேரி அரசின் அதிகாரத்தில் எதற்கெடுத்தாலும் கிரண்பேடி மூக்கை நுழைப்பதாகவும், இதனால் மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்ற முடியவில்லை எனக் கூறி, பல்வேறு போராட்டங்களிலும் முதல்வர் நாராயணசாமி ஈடுபட்டார்.கடந்த ஜனவரி மாதம், ஆளுநர் மாளிகை முன்பே தனது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியினருடன் 3 நாட்களாக இரவு, பகலாக தர்ணா போராட்டத்திலும் நாராயணசாமி ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதைக்கு, முதல்வர் நாராயணசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாகப் போனாலும், மீண்டும் இருவருக்கும் இடையே சர்ச்சைகள் வெடித்த வண்ணமே உள்ளது.

அரசு அனுப்பும் கோப்புகளில் கையெமுத்திட ஆளுநர் மறுக்கிறார். நலத்திட்டங்கள் வழங்குவதை தடுக்கிறார்.புதுச்சேரியில் தனி தர்பார் நடத்த முயல்கிறார் என்றெல்லாம் கிரண் பேடி மீது முதல்வர் நாராயணசாமி குற்றச்சாட்டுகளை அடுக்கி வருகிறார். ஆனாலும் இதையெல்லாம் சட்டை செய்யாமல் தன் பாணியில், வீதிகளில் இறங்கி கிரண்பேடி அடிக்கடி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதும், அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பிப்பதும் முதல்வர் நாராயணசாமியை மேலும், மேலும் கோபம் கொள்ளச் செய்துள்ளது என்றே கூறலாம்.

 

இதனால், இன்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் நடந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 102 -வது பிறந்த நாள் விழாவில், ஆளுநர் கிரண்பேடி பற்றி முதல்வர் நாராயணசாமி கொந்தளித்துப் பேசினார். மாநில அரசின் எல்லா திட்டங்களுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக உள்ளார். சர்வாதிகாரி போல் தனி தர்பார் நடத்துகிறார். சர்வாதிகாரி ஹிட்லரின் தங்கை போலவே செயல்படுகிறார் என்றெல்லாம் கிரண்பேடியை சரமாரியாக முதல்வர் நாராயணசாமி விமர்சித்துப் பேசியது, புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon