பள்ளி கேன்டீன்களில் கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் விற்கத் தடை
பள்ளி கேன்டீன்களில் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய நொறுக்கு தீனிகள் விற்க தடை விதித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர கட்டுப்பாட்டு ஆணையமான எஃப்எஸ்எஸ்ஏஐ வெளியிட்டிருக்கும் சுற்றறிக்கையில் பள்ளிகளில் உள்ள கேன்டீன்களில் மாணவர்களின் நலனுக்கு ஏற்ற உணவுகள் விற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது .
அதிக காரம், அதிக கொழுப்புள்ள உணவு, அதிக உப்பு அல்லது அதிக இனிப்புகள் நிறைந்த உணவுகள் கேடு விளைவிக்கக் கூடியவை என்பதால் அவற்றை கேன்டீன்களில் விற்பனை செய்ய தடை விதிக்கப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் பள்ளிகளை சுற்றி 50 மீட்டர் இடைவெளியில் உள்ள கடைகளிலும் இந்த நடைமுறை பின்பற்றப்பட வேண்டும் என்றும் உணவின் தரம் குறித்து அதன் தயாரிப்பாளர்களுக்கு ஏற்கனவே உரிய அறிவுரைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நொறுக்குத்தீனி மற்றும் அது தொடர்பான விளம்பர பதாகைகள் சுவர் விளம்பரங்கள் எதுவும் பள்ளி கேன்டீன்களில் இடம் பெறுதல் கூடாது என்றும் இதுகுறித்து பள்ளி நிர்வாகங்களுக்கு முறையாக அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
கேண்டீனில் என்ன உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது என்பதை அந்தந்த மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையத்திற்கு பள்ளி நிர்வாகங்கள் அனுப்பவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.





