நாம் கை காட்டுபவரே பிரதமர் – முதலமைச்சர் ஸ்டாலின்
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மாவட்டச் செயலாளர்கள், வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள், இளைஞரணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கி விடியல் பயணம் வரை மகளிருக்காக திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாகவும், இவை மகளிரிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இனி எந்தக் காலத்திலும் மகளிர் வாக்குகள் நமக்குத்தான் என்பதில் எள் முனையளவும் சந்தேகம் வேண்டியதில்லை என்றும் முதலமைச்சர் கூறினர். தமிழ்நாட்டில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.
இளைஞர்களையும், புதிய வாக்காளர்களையும் ஈர்க்கும் எஃகு கோட்டையாக கழகம் திகழ்கிறது என்பதை இந்த மாநாட்டின் மூலமாக நிரூபித்துக் காட்ட வேண்டும்.
ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலிருந்தும் தலா ஆயிரம் இளைஞர்களாவது கலந்து கொள்ளும் பிரமாண்டமான மாநாடாக சேலம் மாநாடு அமைந்திடல் வேண்டும் என்று அறிவுறுத்திய முதலமைச்சர் ஸ்டாலின், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நாம் கைகாட்டுபவரே பிரதமராக வேண்டுமென்றால், நாம் நாற்பது தொகுதிகளையும் வென்றாக வேண்டும் என்று கூறினார்.






