மறைந்த எச்.வசந்தகுமார் எம்.பி. உடலுக்கு ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி… நாளை சொந்த ஊரில் நல்லடக்கம்!!
உடல் நலக்குறைவால் காலமான கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி., வசந்தகுமார் உடல் சென்னையில் உள்ள அவரது வீட்டிலும், பின்னர் தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திலும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
அரசியல் கட்சித் தலைவர்கள் , காங்கிரஸ் பிரமுகர்கள், திரைப்படத்துறை மற்றும் தொழில் துறையினர், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை அவருடைய உடல் சொந்த ஊரான நாகர்கோவில் அருகிலுள்ள அகஸ்தீஸ்வரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.
வசந்த் அன்ட் கோ என்ற வீட்டு உபயோகப் பொருட்கள் விற்பனை நிலையங்களை தமிழகமெங்கும் நிறுவி தொழில் சக்ரவர்த்தியாக திகழ்ந்த வசந்தகுமார், காங்கிரஸ் கட்சியிலும் படிப்படியாக முன்னேறியவர். இரு எம்எல்ஏ, தறபோது குமரி தொகுதி எம்.பி., மற்றும் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவராக இருந்த வசந்தகுமார், கடந்த 10-ந் தேதி கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
திடீரென சில நாட்களாக அவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டு நேற்று மாலை உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. வசந்த குமாரின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடைசியாக நேற்று காலை எடுக்கப்பட்ட பரிசோதனையில் வசந்த குமாருக்கு கொரோனா தொற்று இல்லை என்று ரிசல்ட் வந்தது. இதனால் அவருடைய உடல் இன்று காலை அப்போலோ மருத்துவமனையில் இருந்து தி.நகர் நடேசன் சாலையில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு வசந்தகுமாரின் குடும்பத்தினர், உறவினர்கள், வசந்த் அன் கோ ஊழியர்கள், பொது மக்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி உள்ளிட்டோரும் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர் .
மேலும் வசந்த குமாரின் உடல், தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலமாக சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை 10 மணிக்கு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என தமிழக காங். தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்றிரவு அறிவித்திருந்தார்.
ஆனால் சத்தியமூர்த்தி பவனில் அஞ்சலிக்காக உடலை வைக்க அனுமதி கிடைக்காததால், தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்திற்கு காலை 11.10 மணியளவில் கொண்டு வரப்பட்டது. அங்கு அரசியல், தொழில் துறை, திரையுலகை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள், காங்கிரஸ் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
வசந்தகுமாரின் உடல் இன்று மாலை சொந்த ஊரான குமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரத்திற்கு இன்று மாலை கொண்டு செல்லப்படுகிறது. அங்கு தொகுதி மக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின் நாளை காலை 10 மணிக்கு வசந்தகுமாரின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.







