கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற இருவர் பலி..!
சென்னையில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்குடி காமராஜர் நகரில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் சுமார் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் பெரியசாமி என்பவர் ஈடுபட்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியதில் பெரியசாமி கூச்சலிடத் தொடங்கினார். அவரை காப்பாற்றுவதற்காக தக்ஷிணாமூர்த்தி என்பவர் கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கிய நிலையில் இருவரும் மயக்கம் அடைந்தனர்.
இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பெரியசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் தக்ஷிணாமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






