புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரிய மனு தள்ளுபடி..!
புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சிக்கு பொது சின்னம் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 9ம் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 23ம் தேதி மதியம் 3 மணியுடன் முடிவடைந்தது. புதுச்சேரியில் தவெக கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் போட்டியிடுகிறது. இந்த நிலையில், நேயம் கட்சியின் தலைவர் நேரு (எ) குப்புசாமி தங்கள் கட்சிக்கு பொது சின்னம் வழங்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தரமாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மனுதாரர் தனது கட்சியை பதிவு செய்ய ஏற்கனவே விண்ணப்பித்து விட்டார். ஆனால், வேட்பு மனு தாக்கல் நேரம் முடிந்த பிறகு 23ம் தேதி மாலை 5.30 மணிக்குத்தான் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஏற்கனவே தங்களுக்கு பொது சின்னம் கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம். எனவே, தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு பொது சின்னம் ஒதுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என வாதிட்டார். இதைக்கேட்ட நீதிபதிகள், வேட்பு மனு தாக்கல் முடிந்துவிட்டால், தேர்தல் ஆணையம் சின்னம் ஒதுக்கீடு உள்ளிட்ட தனது பணியை தொடங்கிவிடும்.
மனுதாரருக்கு சுயேச்சை வேட்பாளருக்கான சின்னமே கிடைக்கும். வேட்பு மனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு கட்சி பதிவு செய்யப்பட்டால் மனுதாரர் பொது சின்னம் கோர முடியாது. அடுத்த தேர்தல்களில் மனுதாரர் பொது சின்னம் கேட்டுக்கொள்ளலாம் என்று தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தனர்.






