--- --:--:-- --

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி..!

3

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக கார்த்திகை தீப நாளன்று உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் தீபம் ஏற்றப்படும்.

 

ஆனால், வழக்கத்திற்கு மாறாக மலை உச்சியில் உள்ள விளக்கு தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற, வழக்கு ஒன்றை விசாரித்த உயர்நீதிமன்றக் கிளை நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். அதன்படி, நேற்று காலை மலை உச்சியில் அதற்கான ஏற்பாடுகளை செய்த கோயில் நிர்வாகம் திடீரென ரத்து செய்தது. இதனை கண்டித்து பாஜக, ஆர்.எஸ்.எஸ். இந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா, தென்னிந்திய பார்வர்டு பிளாக் உள்ளிட்ட அமைப்பினர் மறியலில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே மலை உச்சியில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டும் எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை என தனி நீதிபதி சுவாமிநாதன் முன்பு மனுதாரர் ராம ரவிக்குமார் முறையிட்டார். மாலை 6 மணிக்குள் தீபம் ஏற்றாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நீதிபதி கூறி வழக்கை ஒத்திவைத்தார். ஆனாலும், வழக்கம் போல் உச்சிப்பிள்ளையார் கோயில் மண்டபத்தில் மட்டும் தீபம் ஏற்றப்பட்டது.

 

மேலும் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை, நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வு இன்று விசாரித்தது. அப்போது தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவரே விசாரிப்பார் எனத் தீர்ப்பளித்தனர்.

 

இதையடுத்து திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத்தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வந்தது.

Right Menu Icon