நெல் கொள்முதல் முறைகேடு – முற்றுகைப் போராட்டம் ஒத்திவைப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் நடைபெற்று வரும் நேரடி நெல் கொள்முதல் முறைகேடுகள் குறித்து நாளை நடைபெறவிருந்த முற்றுகைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி ஆர் பாண்டியன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: நேரடி நெல் கொள்முதலில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து, நாளை (மே 27) தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த அறிவித்திருந்தோம்.
இது குறித்து அறிந்த தமிழக அரசின் உணவுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சத்ய பிரதா சாகு ஐ.ஏ.எஸ். மற்றும் மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ். ஆகியோர் இன்று காலை சமாதானக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தனர்.
டிஎன்சிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் மேலாண்மை இயக்குநர் சண்முகசுந்தரம் ஐ.ஏ.எஸ். தலைமையில் இரண்டு மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு என்ற நிறுவனத்துடன் இடைத்தரகர் ஒப்பந்தம் செய்துள்ள தமிழக அரிசி உற்பத்தியாளர் கூட்டமைப்பு (அமுருதீன் ஷேக் தாவூத் தலைமையிலான நிறுவனம்) பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது குறித்து எடுத்துரைத்தோம்.
குறிப்பாக, 40 கிலோ சிப்பம் ஒன்றுக்கு ரூ. 65 கையூட்டாக விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளது.கொள்முதல் செய்வதற்கான அடிப்படை வசதிகள், பணியாளர்கள், தொழில்நுட்பம் இல்லாத இந்நிறுவனம், கொள்முதல் செய்த நெல்லுக்கு சுமார் ரூ. 500 கோடி அளவில் நிலுவை வைத்துள்ளது. இதனால் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.






