தமிழ்நாடு மின்மிகை மாநிலமா? உண்மையல்ல என்கிறார் ப.சிதம்பரம்
தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறி வருவது உண்மையல்ல என்று காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சி இருண்ட காலம்; அதிமுக அரசு திறமையான ஆட்சி செய்த காரணத்தால் தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என்று கூறி வருகிறார்.
ஆனால், காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் இதை மறுத்துள்ளார். அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல என்று அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பதில் அவர் கூறியிருப்பதாவது:
தமிழகத்தை மின்மிகை மாநிலம் என அதிமுக அரசு கூறுவது உண்மையல்ல. மின் மிகை மாநிலம் என்றால் தமிழ்நாடு தன்னுடைய தேவையைப் பூர்த்தி செய்துகொண்டு மிகுதி மின்சாரத்தை மற்ற மாநிலங்களுக்கு விற்கிறது என்று பொருள்.
தமிழ்நாட்டின் மின்சாரத்தேவையில் 50% மட்டுமே தமிழ்நாட்டில் உற்பத்தியாகிறது, 50 % வெளி்மாநிலங்களில் வாங்குகிறோம். தமிழ்நாடு மின்மிகை மாநிலம் என்று எப்படிச் சொல்ல முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.





