திமுக என்றாலே நிலஅபகரிப்பு தான்… திருப்பூரில் ஓபிஎஸ் பேச்சு!
திமுகவினர் என்றாலே நில அபரிப்புதான் நினைவுக்கு வரும். திமுகவினரின் நில அபகரிப்பை அடக்கியது ஜெயலலிதாதான் என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திருப்பூரில் பேசினார்.
வரும் 6ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் சூழலில் பிரசாரம் வேகமெடுத்துள்ளது. அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரசாரம் செய்து வாக்கு சேகர்த்து வருகின்றனர். வரும் சட்டப்பேரவை தேர்தலில் திருப்பூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திருப்பூரில் பிரசாரம் செய்தார்.
உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் உடுமலை ராதாகிருஷ்ணன், மடத்துக்குளம் தொகுதி வேட்பாளர் மகேந்திரன், தாராபுரம் (தனி) தொகுதி பாஜக வேட்பாளர் எல். முருகன், பல்லடம் தொகுதி அதிமுக வேட்பாளர் ஆனந்தன் ஆகியோரை ஆதரித்து உடுமலைப்பேட்டையில் ஓ.பி.எஸ். பிரசாரம் செய்தார். அதை தொடர்ந்து திருப்பூர் வடக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு தொகுதி குணசேகரன், காங்கேயம் தொகுதி வேட்பாளர் ராமலிங்கம் ஆகியோருக்கு ஆதரவாக திருப்பூர் யூனியன் மில் ரோடு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஓ.பி.எஸ். வாக்கு சேகரித்தார்.
திருப்பூர் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: பெண்களின் திருமண உதவிதொகையை உயர்த்தி வழங்கியது அதிமுக அரசு அதிமுகவை ஒரு எஃகு கோட்டையாக அதிமுகவை மாற்றியவர் ஜெயலலிதா. ஒவ்வொரு திட்டத்தையும் அடித்தட்டு மக்களுக்காக உருவாக்கினார்.
தந்தை பெரியார் கண்ட கனவான ஆணுக்கு பெண் சமம் என்பதை , இலவச இருசக்கர வாகனம் வழங்கியதன் மூலம் நிறைவேற்றப்பட்டது. இலவச இருசக்கர வாகனம் தந்ததால் பெண் வண்டி ஓட்டிச்செல்ல, பின்னால் ஆண் உட்கார்ந்து கொண்டு செல்கிறார். வரும் 2023 ஆம் ஆண்டுக்குள் வீடு இல்லாத அனைவருக்கும் கான்கிரிட் வீடுகள் கட்டித்தரப்படும்.
திமுக ஆட்சி காலத்தில் 45 ஆயிரம் கோடியாக இருந்த தொழிற்சாலைகள், தற்போது 6 லட்சத்து 85 ஆயிரம் கோடிகளுக்கு தொழிற்சாலைகள் என்ற நிலையை எட்டப்பட்டுள்ளது. திமுக – அதிமுக இரண்டு கட்சிகளுமே தேர்தல் அறிக்கையை தந்துள்ளன. திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அது செல்லாது , அதிமுக தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு அதுதான் செல்லும்.
தற்போதைய அதிமுக ஆட்சியில் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் உள்ளனர். சட்டம்- ஒழுங்கு எங்கும் கெட்டுப்போகவில்லை. சிறுபான்மையினர் மக்களுக்கு அதிமுக எப்போதுமே உறுதுணையாக உள்ளது. திமுக எதிர்கட்சி ஆக உள்ளது. நாம் ஆளும்கட்சி. நாம் அனைவரிடமும் அன்பாக பழகி வருகிறோம். நாம் பிரியாணி, புரோட்டா சாப்பிட்டால் காசு கொடுக்கிறோம். ஆனால் திமுகவினர் சென்றால் அமளிகாடுதான் என்று ஓ.பி.எஸ்.பேசினார்.
இதில், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தமிழக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






