மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு செய்யூர் எம்எல்ஏ மருத்துவமனையில் அனுமதி
தமிழகத்தில் மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கெரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செய்யூர் தொகுதி எம்எல்ஏ அரசு கொரோனா தொற்று பாதிப்பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திமுக எம்எல்ஏக்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ உயிரிழந்த சோகமும் நிகழ்ந்த நிலையில் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை முக்கால் லட்சத்தை எட்டியுள்ள நிலையில் உயிரிழப்பும் ஆயிரத்தை நெருங்கியுள்ளது. கொரோனா பாதிப்பு அரசியல் புள்ளிகள், தொழிலதிபர்கள், விஐபிக்கள் என பலரையும் விட்டு வைக்கவில்லை. இதில் எம்எல்ஏக்களும் தப்பவில்லை.
இரு வாரங்களுக்கு முன்பு சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், கொரோணா பாதிப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தொடர்ந்து ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ பழனி ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றனர். மேலும் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகனுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏவுக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியாகியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூர் தொகுதி எம்எல்ஏவான அரசு உடல் நலக் கோளாறால் சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சிகிச்சையில் உள்ள எம்எல்ஏ அரசுவின் உடல்நிலை சீராக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பால் திமுகவைச் சேர்ந்த மேலும் ஒரு எம்எல்ஏ சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது திமுகவினரை மேலும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.






