--- --:--:-- --

ஓ. பன்னீர்செல்வத்திற்கு அமித்ஷாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் – நயினார் நாகேந்திரன்

6

.தி.மு.க.வில் செங்கோட்டையன் 10 நாட்கள் கெடு விதித்து போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு நிச்சயம் கிடைக்கும் என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.

 

அண்மையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவரை கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கினார். இதைத் தொடர்ந்து, செங்கோட்டையன் ஹரித்துவார் செல்வதாகக் கூறிவிட்டு, திடீரென டெல்லியில் அமித்ஷாவைச் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

செங்கோட்டையனுக்கு ஆதரவாக ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் மற்றும் சசிகலா ஆகியோர் கருத்து தெரிவித்தனர். இந்தச் சூழலில், திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரனுடன் தொலைபேசியில் பேசியதாகவும், கூடிய விரைவில் சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோரைச் சந்திக்க இருப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம், இப்போதைக்கு டெல்லி செல்லும் திட்டம் எதுவும் இல்லை என்றும் அவர் கூறினார்.

 

இதைத் தொடர்ந்து, அ.தி.மு.க பூசல் அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டுவரும் நிலையில், நயினார் நாகேந்திரன் ஊடகங்களிடம் பேசும்போது, “கூட்டணிக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திப்பது நல்ல விஷயம் தான். அப்போது கூட்டணியை வலுப்படுத்துவார்கள். அதை எப்படி செய்வார்கள் என்பதை அவர்கள்தான் முடிவெடுப்பார்கள். ஓ. பன்னீர்செல்வத்துடன் நான் தொலைபேசியில் பேசியுள்ளேன். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்திப்பதற்கான வாய்ப்பு அவருக்கு நிச்சயம் கிடைக்கும்” என்று தெரிவித்தார்.

 

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வரும் 16ஆம் தேதி டெல்லி செல்லவிருக்கும் நிலையில், நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கள் அரசியலில் கவனம் பெற்றுள்ளது.

Right Menu Icon