--- --:--:-- --

சென்னையில் இந்தியா vs மே.இ.தீவுகள் ஒரு நாள் போட்டி : டிக்கெட் விற்பனை மந்தம் – காரணம் என்ன?

hg

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 15-ந் தேதி இந்தியா மற்றும் மே.இ.தீவுகள் மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி நடைபெற உள்ளது.போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்கிய நிலையில், கூடுதல் விலை காரணமாக ரசிகர்கள் ஆர்வம் காட்டாததால் விற்பனை மந்தமாகியுள்ளது.

 

இந்தியாவிலேயே கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம் உள்ள நகரம் என்றால் அது சென்னை தான். இதனால் சென்னை சேப்பாக்கத்தில் கிரிக்கெட் போட்டி என்றாலே, ரசிகர்கள் உற்சாகமாகி விடுவார்கள். டிக்கெட் விற்பனை எப்போது? என்ற அறிவிப்பு வெளியானவுடன், முதல் நாள் இரவு முதலே மைதானத்தின் வெளியே வரிசை கட்டி நின்று விடுவார்கள். டிக்கெட் வாங்க முட்டி மோதுவதால் அடிதடி ரகளை கூட இதற்கு முன் நடந்ததுண்டு. இதனால் டிக்கெட் விற்பனையின் போது கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்படுவதுண்டு.

இந்நிலையில், மே.இ.தீவுகள் அணியுடன் இந்தியா மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி வரும் 15-ந் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்கான டிக்கெட்டுகள் விற்பனை இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

டிக்கெட் வாங்க ரசிகர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக, இன்று ரசிகர்கள் கூட்டம் அலைமோதவில்லை. காலை முதல் தான் கணிசமான ரசிகர்கள் வரிசையில் நிற்க ஆரம்பித்து, நெரிசல் இன்றி டிக்கெட் வாங்கிச் சென்றனர். இதனால் இன்று டிக்கெட் விற்பனை படு மந்தமாகவே இருந்தது.

இந்தப் போட்டிக்கான டிக்கெட் கட்டணமாக குறைந்த பட்சமாக 1200 ரூபாயும், அதிக பட்சமாக ரூ
.12,500-ம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்ததும் டிக்கெட் விற்பனை மந்தமானதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. கடந்தாண்டு நடந்த போட்டியில் குறைந்த பட்சமாக ரூ.550 விலை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இம்முறை ஜிஎஸ்டியை காரணம் காட்டி டிக்கெட் விலை அதிகரிக்கப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் சென்னையில் தொடர் மழை பெய்து வருவதால், மழையால் போட்டி பாதித்து விடுமோ? என்ற அச்சத்திலும் ரசிகர்கள் டிக்கெட் வாங்க ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

கிரிக்கெட் மைதான நிர்வாகம் தரப்பிலோ விற்பனை மந்தம் என்பதை மறுத்துள்ளனர். டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமும், பேடி எம் மூலமும் விற்பனை செய்யப்படுவதே, மைதானம் முன் ரசிகர்கள் குவியாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon