--- --:--:-- --

“பாஜகவின் வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது!!” தமிழக அரசு அதிரடி முடிவு!!

1.1

மிழக பாஜக சார்பில் நாளை முதல் ஒரு மாதத்துக்கு தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள வேல் யாத்திரைக்கு அனுமதி தரமுடியாது என தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது இதனால் வேல் யாத்திரைக்கு தடை போடப்படுமா? பாஜக தரப்பில் தடையை மீறி வேல் யாத்திரை நடத்தப்படுமா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் பாஜகவை எப்படியாவது காலூன்ற செய்வோம்; வரும் சட்டசபைத் தேர்தலில் தாமரையை மலரச் செய்வோம். அடுத்து கூட்டணி ஆட்சிதான்; பாஜகவும் ஆட்சியில் அங்கம் வகிக்கும் என அக்கட்சியினர் கங்கணம் கட்டிக் கொண்டு பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வருகின்றனர்.

 

இதனால் கடந்த ஓரிரு மாதங்களாகவே பாஜக பற்றிய செய்திகள் முக்கியத்துவம் பெற்று வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, தமிழகம் முழுவதும் ஒரு மாதத்துக்கு வேல் யாத்திரை நடத்தப் போவதாகவும் பாஜக அறிவித்துள்ளது. நாளை (நவம்பர் -6) திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்கி அடுத்த மாதம் 6-ந்தேதி திருச்செந்தூரில் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் பாஜகவின் இந்த வேல் யாத்திரைக்கு திமுக காங்கிரஸ், விசிக , மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. தமிழகத்தில் மதக் கலவரத்தை தூண்டப் பார்க்கிறது பாஜக என்றும், வேல் யாத்திரையை தடை செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர்கள் குரல் கொடுத்தனர்.

 

மேலும் வேல் யாத்திரைக்கு தடை கோரியும், தமிழக அரசு அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.வேல் யாத்திரைக்கு தடை விதிக்கக்கோரி செந்தில்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

 

வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கினால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்றும், பாபர் மசூதி இடிப்பு தினத்தில் வேல் யாத்திரை நிறைவடைய இருப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் மனுவில் தெரிவித்திருந்தார்.

 

இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளர், சுகாதாரத் துறை செயலாளர், தமிழக டிஜிபி, பாரதிய ஜனதா மாநில தலைவர் எல்.முருகன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கை இன்று விசாரிப்பதாக நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு தெரிவித்திருந்தது.

 

இந்நிலையில் இன்று வழக்கு விசாரணையின் போது பா.ஜ.கவின் வேல் யாத்திரைக்கு அனுமதி வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைக்கான அச்சுறுத்தல் உள்ளதால் அனுமதி தரமுடியாது என தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் வேல் யாத்திரைக்கு தடை போடப்படுமா? தடையை மீறி பாஜக தரப்பில் யாத்திரை நடத்தப்படுமா? என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

Leave a Reply

Right Menu Icon