தேசிய மக்கள் பதிவேடு தயாரிப்புத் திட்டம் இப்போதைக்கு இல்லை…! மத்திய அரசு திடீர் பல்டி!!
நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு(என்ஆர்சி) தயாரிக்கும் திட்டம் இப்போதைக்கு இல்லை என மத்திய அரசு இந்தத் திட்டத்திலிருந்து பின்வாங்கி உள்ளது.
சமீபத்தில் மத்திய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தொடர்ந்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என மத்திய அரசு புதிய திட்டங்களையும் கொண்டு வரப் போவதாக அறிவித்தது.
கடந்த இரண்டு மாதங்களாக குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு போன்றவற்றிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி, தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் மத்திய அரசோ தனது முடிவில் இருந்து பின்வாங்க போவதில்லை என அறிவித்திருந்தது. உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இதை திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கடந்த இரு நாட்களாக எதிரொலித்து வருகிறது. நேற்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இன்றும் இதே விவகாரத்தில் நாடாளுமன்ற இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது. அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு குடியுரிமை சட்டம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் நோட்டீசும் கொடுத்திருந்தன.இந்நிலையில், இன்று கடும் கூச்சல் குழப்பத்துக்கு இடையே மத்திய உள்துறை துணை அமைச்சர் நித்யானந்த் ராய் மக்களவையில் எழுத்துப் பூர்வமாக ஒரு பதில் தெரிவித்தார்.
அதில், இந்திய குடிமக் களின் தேசிய பதிவேடு தயாரிப்பது தொடர்பாக மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மேலும் குடியுரிமை திருத்தச் சட்டம், குடிம்களின் தேசிய பதிவேடு தொடர்பாக நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு, மத்திய அரசின் இந்தப் பதில் தெளிவுபடுத்தும் என நம்புவதாகவும் பதிலளித்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், குடிமக்கள் பதிவேடு தயாரிப்பது இப்போதைக்கு இல்லை என மத்திய அரசு பின் வாங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.





