மர்மமான முறையில் இளைஞர் சடலம் கண்டெடுப்பு..! காதலியின் வீட்டாரே காரணம் எனக்கூறும் உறவினர்கள்..!
தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே ஆற்றுப் பாலத்தின் கீழ் மர்மமான முறையில் இறந்து கிடந்த இளைஞரின் உடலை எடுத்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருவண்ணாமலை மாவட்டம் இளகொன்னியை சேர்ந்த கிளிண்டன் என்ற அந்த இளைஞர் ஓசூரில் பணிபுரிந்து வந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை மதியம் சொந்த ஊர் கிளம்பியவர் மறுநாள் காலை அம்மாபேட்டை ஆற்றுப்பாலத்தின் கீழ் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். முல்லைவனம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை அவர் காதலித்ததாகவும் அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில் ஞாயிற்று கிழமை அவருடன் பேசியதாகவும் கூறப்படுகிறது.
எனவே பெண் வீட்டார் தான் அவரை கொலை செய்திருக்க வேண்டும் எனக் கூறி அவரது உடலை போலீசார் எடுத்துச் செல்ல விடாமல் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட பெண்ணின் தந்தையும் தலைமறைவாகி உள்ளதால் விசாரணை தீவிரம் அடைந்துள்ளது.






