ம.பி.ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார்!
மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் காலமானார். 85 வயதான டாண்டன் உடல் நலக் கோளாறால் கடந்த 10 நாட்களாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை அவர் உயிர் பிரிந்தது.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த லால்ஜி டாண்டன் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர். மறைந்த பிரதமர் வாஜ்பாய்க்கு மிகவும் நெருக்கமானவர். உத்தரப் பிரதேச அரசியலில் முக்கியப் பங்கு வகித்த லால்ஜி டாண்டன், அம்மாநில மேல் சபையில் 2 முறையும், சட்டசபையில் 3 முறை எம்எல்ஏவாகவும், இருமுறை அமைச்சராகவும் பதவி வகித்தவர். வாஜ்பாய் மறைவுக்குப் பின், அவர் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்று வந்த லக்னோ மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு 2009ல் எம்.பி.யாகவும் தேர்வானவர் டாண்டன்,
அரசியலில் இருந்து ஒதுங்கிய லால்ஜி டாண்டனை 2014ல் பீகார் மாநில ஆளுநராகவும், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ம.பி.ஆளுநராகவும் நியமித்தது மத்திய பாஜகஅரசு.கடந்த சில மாதங்களுக்கு முன் ம.பி.மாநிலத்தில் ஆட்சியில் இருந்த கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்ந்து, பாஜக அரசு பதவியேற்றது. அப்போது ம.பி.யில் ஏற்பட்ட கடும் அரசியல் நெருக்கடிகளை திறம்பட கையாண்ட தில் லால்ஜி டாண்டனின் பங்கும் முக்கியமானது என்றே கூறலாம்.
85 வயதான டாண்டன் சிறுநீரக கோளாறு மற்றும் சுவாசப் பிரச்னையால் கடந்த 10 நாட்களாக லக்னோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று காலை 7.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அவருடைய மகன் அசு தோஷ் டாண்டன் டுவிட்டரில் பதிவிட்டார். டாண்டன் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். டாண்டன் மறைவை அடுத்து உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் படேல், ம.பி.ஆளுநர் பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.







