அம்மா நலமாக உள்ளார்.. தயவு செய்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்…! பிரபல பாடகி எஸ்.ஜானகியின் மகன் உருக்கம்!!
பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகியின் உடல்நிலை குறித்து பரவி வரும் செய்திகளுக்கு அவருடைய மகன் மறுப்பு தெரிவித்துள்ளார். அம்மா உடல் நலத்துடன் உள்ளார். தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என அவரது மகன் முரளி கிருஷ்ணா வேண்டு கோள் விடுத்துள்ளார்.
தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களில் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மொழிப் படங்களில் பிரபல பின்னணி பாடகியாக புகழ் பெற்றவர் எஸ்.ஜானகி. 82 வயதான எஸ்.ஜானகி, 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் கான குயிலாகவே பாடிப் பறந்தார். 17 மொழிகளில் 48 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடி உள்ளார்.
வயது மூப்பு காரணமாக பாடுவதை நிறுத்திக் கொண்டார். ஐதராபாத்தில் வசித்து வரும் இவரின் உடல்நலம் பற்றி அவ்வப்போது சில தவறான தகவல்களும், வதந்திகளும் உலா வருவது கடந்த சில ஆண்டுகளாகவே வழக்கமாகி விட்டது.

அது போல் இப்போதும் அவரைப்பற்றி தவறான செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் உலா வந்து அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் கவலையில் ஆழ்த்தியது.இந்நிலையில் இந்த செய்தியை மறுத்துள்ள எஸ்.ஜானகியின் மகன் முரளி கிருஷ்ணா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், அம்மாவிற்கு சிறிய அளவிலான ஆபரேஷன் ஒன்று நடந்துள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக முன்னேறி வருகிறது. தயவு செய்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம், அம்மா நலமாக உள்ளார் என உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.






