சரியான “வாபஸ்” பழனிசாமி..!! +2 புதிய பாடத்திட்டம் ரத்து குறித்து முதல்வர் எடப்பாடி மீது மு.க.ஸ்டாலின் கிண்டல் விமர்சனம்
இந்தாண்டு முதல் +2 மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் என்ற முந்தைய அரசாணையை ரத்து செய்து விட்டு பழைய பாடத்திட்டமே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டு பின்னர் திரும்பப் பெறுவது வாடிக்கையாகிவிட்டது என்றும், முதல்வர் எடப்பாடியை சரியான “வாபஸ்” பழனிசாமி என்றும் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் +1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இந்தாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு ஏற்கனவே ஆணை பிறப்பித்திருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில் தமிழக அரசு பிடிவாதமாக இருந்தது.
இந்நிலையில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் திறப்பு காலதாமதம் ஆகி வருகிறது. இதனால் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல் என்பதால் இந்த கல்வியாண்டில் பழைய பாடத்திட்டமே தொடரும் எனவும், புதிய பாடத்திட்டம் குறித்த முந்தைய அரசாணை ரத்து செய்யப்படுகிறது எனவும் தமிழக அரசு இன்று அறிவிப்பு வெளியிட்டது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தில் பதிவிட்டுள்ளதாவது:
குளறுபடியான புதிய பாடத் தொகுப்பை ரத்து செய்ய வேண்டும் என நான் கோரி இருந்தேன். இப்போதாவது அதனை ரத்து செய்திருப்பதை வரவேற்கிறேன்.
முடிவுகளை அவசரமாக அறிவித்துவிட்டுப் பின்னர் திரும்பப் பெறுவது இந்த அரசின் வழக்கமாகிவிட்டது, இலட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலம் சார்ந்த முடிவிலும் இத்தனை அலட்சியமா? சரியான ‘வாபஸ்’ பழனிசாமி என்று முதல்வர் எடப்பாடியை கிண்டலாக விமர்சித்துள்ளார்.







