எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல திமுக… ஸ்ரீரங்கம் கோவில் முன்பு ஸ்டாலின் பிரசாரம்
திமுக எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல என்று, ஸ்ரீரங்கத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். அவ்வகையில் திமுக தலைவர் ஸ்டாலின், ஸ்ரீரங்கத்தில் இன்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:
திமுக, “ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்ற கொள்கையில் உறுதியாக உள்ளது. அதன் அடிப்படையில், ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்’ என்ற குறிக்கோளைக் கொண்டுள்ளோம். எந்த மதத்திற்கும் எதிரானது அல்ல திமுக.
மோடி முதன்முதலாக பிரதமராக வந்த நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்தார். அதில், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்பேன் என்றார். கொடுத்தாரா? வெளிநாட்டில் பதுக்கி வைத்திருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டு, இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் வங்கியில் போடுவேன் என்றார். கொடுத்தாரா? விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்காக உயர்த்துவேன் என்று சொன்னார். உயர்த்தப்பட்டிருக்கிறதா?
எல்லோருக்கும் செல்போன் இலவசமாகக் கொடுப்பேன் என்று அதிமுக சொன்னது. கொடுத்தார்களா? பால் விலை லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுப்போம் என்று சொன்னார்கள். கொடுத்தார்களா? வேளாண் இடுபொருட்கள் அனைத்தும் இலவசம் என்று சொன்னார்கள். தந்தார்களா? அந்த இரண்டு பேரும் ஜோடி போட்டுக்கொண்டு இந்தத் தேர்தலுக்கு வாக்குக் கேட்டு வருகிறார்கள். அவர்களை எல்லாம் வரும் 6ம் தேதி ஆட்சியை விட்டு விரட்டும் வகையில் திமுகவுக்கு வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று ஸ்டாலின் பேசினார்.






