மேட்டுப்பாளையம் : சிறுமுகை வனச்சரக பகுதியில் ஆட்டை வேட்டையாடிய சிறுத்தை.சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள கரட்டுமேடு பகுதியில் ஆடுகளை வேட்டையாடும் சிறுத்தையை பிடிக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள சிறுமுகை வனச்சரக பகுதிக்குட்பட்ட ஒடந்துறை சென்னாமலை கரடு, கரட்டு மேடு ஆகிய பகுதிகள் உள்ளது. இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது.
இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து கரடி, காட்டுப்பன்றி, சிறுத்தை, கடமான், புள்ளிமான், காட்டுயானைகள் உள்ளிட்டவைகள் அவ்வப்போது இப்பகுதிகளில் புகுந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில் கரட்டுமேடு, சென்னாமலை கரடு பகுதியில் கடந்த சில நாட்களாக நாய், ஆடு ஆகியவை அடிக்கடி காணாமல் போய் உள்ளது.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக கூறி சென்னாமலை கரடு பகுதியில் சிறுமுகை வனத்துறையினர் கூண்டு வைத்தனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கரட்டுமேடு பகுதியில் சிறுத்தைகள் நுழைந்து அங்கு கட்டி வைக்கப்பட்டிருந்த ஆடு ஒன்றை வேட்டையாடியது. அப்போது,ஆட்டின் அலறல் சப்தம் கேட்டு அங்கு மக்கள் சிறுத்தையை பார்த்து கூச்சலிட்டு அதனை அங்கிருந்து விரட்டி அடித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இன்று மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகம் முன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிறுமுகை வனத்துறையினர் கரட்டு மேடு பகுதியில் நடமாடும் சிறுத்தைகளை கூண்டு வைத்து பிடிக்க கூடுதலாக கூண்டு வைக்கப்படும் என கூறியதை அடுத்து மறியலில் ஈடுபட்ட மக்கள் அங்கிருந்து கலைந்துசென்றனர். இதனால் இப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.






