மேகதாது அணை: விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா முடிவு
கர்நாடகாவில் 2026- 2027 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில முதல்வர் சித்தராமையா இன்று (மார்ச் 6) தாக்கல் செய்தார். இந்நிலையில், மேகதாது திட்டத்திற்கான திருத்தப்பட்ட விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.
இது குறித்து பட்ஜெட் உரையில் சித்தராமையா கூறியதாவது, “எங்கள் மாநிலத்தின் முதன்மைத் திட்டமான மேகதாது திட்டம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது, நமது மாநிலத்திற்கு கிடைத்துள்ள ஒரு குறிப்பிடத்தக்க சட்ட வெற்றியாகும்.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், மாற்றியமைக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கை மற்றும் வனத்துறை அனுமதி கோரும் முன்மொழிவு ஆகியவை விரைவில் மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கப்படும்” என்று கூறியுள்ளார். காவிரி ஆற்றின் குறுக்கே, கர்நாடகாவின் கனகபுரா அருகே சுமார் ரூ.9,000 கோடி மதிப்பீட்டில் ஒரு அணையை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
மேகதாது அணைத் திட்டத்திற்கு எதிராகத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை கர்நாடக அரசு தனது பெரிய சட்ட வெற்றியாக கருதுகிறது. பெங்களூரு நகரத்தின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்தல் மற்றும் சுமார் 400 மெகாவாட் மின்சாரம் தயாரித்தல் போன்றவற்றை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து, கர்நாடக அரசு மாற்றப்பட்ட விரிவான திட்ட அறிக்கை காலத்திற்கேற்ப மாற்றியமைக்கப்பட்ட புதிய திட்ட அறிக்கையைத் தயார் செய்ய முடிவெடுத்துள்ளது. அணை கட்டப்படும் பகுதி வனப்பகுதியை உள்ளடக்கியது என்பதால், மத்திய அரசிடம் இதற்கான அனுமதியைக் கோர திட்டமிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பட்ஜெட்டில் இந்த திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.






