நடிகர் அஜித்தை புகழ்ந்து பேசும் மீரா மிதுன்..!
தரம் தாழ்ந்து விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். மீராமிதுன் விவகாரத்தில் ஆதரவு குரல் அளித்துள்ள இயக்குனர் பாரதிராஜாவுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தமிழில் வெளியான 8 தோட்டாக்கள் என்ற திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மீரா மிதுன்.
எனினும் இவர் பிரபலமானது தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான். அதில் பல சர்ச்சைகளைக் கிளப்பிய இவர் அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பலர் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து வந்தார். நடிகர் சுஷாந்தின் மரணத்திற்குப் பிறகு பாலிவுட்டில் பூதாகரமாகி உள்ள நெப்போடிசம் எனப்படும் வாரிசுகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவிலும் உள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார் மீரா மிதுன்.
கலைஞர்களின் வாரிசுகளாக இருக்கும் விஜய், சூர்யா மீது அவர் அடுக்கடுக்கான விமர்சனங்களையும் குற்றச்சாட்டுகளையும் எழுப்பினார். இதற்கு சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களும் எதிர்வினை ஆற்றி வந்தனர். இந்நிலையில் மீராமிதுன் ஒருபடி மேலே சென்று விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பத்தினர் குறித்து தரம் தாழ்ந்த ரீதியில் பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
தானாசேர்ந்தகூட்டம் திரைப்படத்தில் தான் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு சூர்யா தான் காரணம் என மீராமிதுன் விமர்சித்தார். நடிகர் விஜய் மற்றும் சூர்யாவை இகழ்ந்து வந்த மீராமிதுன் நடிகர் அஜித்தை புகழ்ந்து பதிவிட்டார். இதனால் அஜீத் ரசிகர்கள் மீரா மிதுனுக்கு ஆதரவாக கருத்து கூறியதையும் காணமுடிந்தது.
நடிகர் விஜய் மற்றும் சூர்யாவின் குடும்பங்களை இகழ்வது ஏற்கத்தக்கது அல்ல எனக் கூறிய இயக்குநர் பாரதிராஜா கவர்ச்சிகரமான சினிமாத்துறையில் பெயர் கெட்டு விடாத வகையில் இருவரும் வாழ்ந்து வருவதாக அறிக்கை வெளியிட்டார். அஜித் ரசிகர்கள் மீராமிதுனை ஆதரித்து கருத்து பதிவிட்ட நிலையில் நடிகர்கள் தங்களது ரசிகர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் பாரதிராஜா அறிவுரை கூறினார்.
இந்நிலையில் தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்ற வேண்டாம் என தனது ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரியில் ட்விட்டரில் பதிவிட்டிருந்த கருத்தை தற்போது மேற்கோள் காட்டியுள்ள சூர்யா தனது தம்பி, தங்கைகளின் நேரமும் சக்தியும் ஆக்கபூர்வமான செயல்களுக்கு பயன்பட வேண்டும் என கூறியுள்ளார்.
மீரா முன்வைப்பது பொய்யான குற்றச்சாட்டுகள் ஆக இருப்பின் விஜய் கூறுவது போல இக்னோர் நெகட்டிவிட்டி எனும் வழியை ரசிகர்கள் கடைபிடிப்பது சிறந்தது என பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.







