நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் எழுப்பவேண்டிய விஷயங்கள்..!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடரின் பொழுது குஜராத் வன்முறை குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம் தொடர்பான சர்ச்சை, சேது சமுத்திரத் திட்டம், நீட்விலக்கு மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தருவது உள்ளிட்ட விஷயங்களை எழுப்பும்படி திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
திமுக தலைமை நிலையம், அண்ணா அறிவாலயத்தில் திமுக மக்களவை மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையின் நடைபெற்றது.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய அரசின் 2023 – 2024 நிதி நிலை அறிக்கை மற்றும் இந்த கூட்டத்தொடரில் திமுக எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.
குறிப்பாக தமிழ்நாடு தொடர்பான முக்கிய பிரச்சினைகள் குறித்தும் அகில இந்திய அளவில் முக்கியத்துவம் பெற்றுள்ள, குஜராத் வன்முறை குறித்து பிபிசி வெளியிட்டு ஆவணப்பட சர்ச்சை, அதானி குழுமத்தால் ஏற்பட்ட இழப்புகள் மற்றும் இந்திய குடியரசு துணைத் தலைவர் உள்ளிட்டவர்கள் தெரிவிக்கும் தேவையற்ற கருத்து குறித்தும் நாடாளுமன்றத்தில் உறுதியான விவாதங்களை எடுத்து வைத்திட திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியதாக தெரிகிறது.






