ஆன்லைனில் புக் செய்தால் “குடிமகன்கள்” வீட்டுக்கே “சரக்கு” சப்ளை..! எங்கே தெரியுமா..? நம்ம ஊர்ல இல்ல.. ம.பி.,யில் தான்!!
ஆன்லைனில் புக் செய்தால் உள்நாட்டு, வெளிநாட்டு உற்சாக பானத்தை டோர் டெலிவரி செய்யும் திட்டத்தை மத்தியப் பிரதேச மாநில அரசு அமல்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தடுக்கி விழுந்தால் டாஸ்மாக் கடை என்ற அளவுக்கு மதுக்கடைகள் பெருகிவிட்டன. இதன் மூலம் குடிமகன்கள் எண்ணிக்கையும் அதிகரித்து தமிழக அரசுக்கு வருவாயும் பன்மடங்காக கொட்டுகிறது. அது மட்டுமின்றி டாஸ்மாக் வருவாயையே தமிழக அரசும் பிரதானமாக கருதுகிறது என்றும் கூறலாம்.
தமிழக அரசை காப்பி அடித்ததோ என்னவோ? மத்தியப்பிரதேச அரசும் மதுபான விற்பனையை அதிகரிக்க திட்டம் போட்டுவிட்டது. அந்த மாநிலத்தில் அரசுக்கு போதிய வருமானம் இல்லையாம். அதனால் இந்த ஆண்டில் 25% கூடுதல் வருமானம் பார்க்க முடிவு செய்துள்ளது.
இதற்காக மதுக்கடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அம்மாநில அரசு திட்டம் போட்டுள்ளது. புதிதாக 2600 உள்நாட்டு மதுபானங்கள் விற்பனை செய்யும் கடைகளையும் 1100 அயல் நாட்டு மதுபான விற்பனை நிலையங்களையும் திறக்கப்போவதாக அறிவித்துள்ளது.
அது மட்டுமின்றி குடிமகன்களின் வீடுகளுக்கே நேரடியாக மதுபானங்களை கொண்டு செல்லும் புதிய அறிவிப்பையும் ம.பி.அரசு அறிவித்துள்ளது.அதன்படி ஆன்லைன் மூலம் புக் செய்தால் உள் நாடோ, வெளிநாடோ எந்த சரக்கு தேவையோ, வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இதனால் ம.பி.யில் குடிமகன்கள் பாடு கொண்டாட்டம் தான்.





