‘தாமரை – இலை’ ஆர்ப்பாட்டம்! *குலுங்கியது திருப்பூர்..* ஷாக் மோடில் திமுக!
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட கையோடு, தமிழக அரசியல் களம் அனல் பறக்கத் தொடங்கியிருக்கிறது. “யார் அந்த அரியணைக்குச் சொந்தக்காரர்?” என்ற யுத்தம் ஒருபுறம் இருக்க, ஆளுங்கட்சியான திமுகவை நோக்கி அம்பு எய்தும் வேலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) விஸ்வரூபம் எடுத்துள்ளது.
பாலியல் வன்கொடுமைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் புழக்கம் என அடுக்கடுக்கான புகார்களைச் சுமந்துகொண்டு, தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு அரங்கேற்றியது தேசிய ஜனநாயகக் கூட்டணிப் படை.
தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் நடந்தது போலவே திருப்பூரிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் குமரன் சிலை முன்பு திரண்டிருந்த அந்தப் பெருங்கூட்டம், வெறும் போராட்டமாகத் தெரியவில்லை; வரப்போகும் தேர்தல் புயலுக்கான முன்னெச்சரிக்கை சமிக்ஞையாகவே பார்க்கப்பட்டது.
நிம்மதியைத் தொலைத்த தமிழகம்!
ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய முன்னாள் துணை சபாநாயகரும், அதிமுகவின் திருப்பூர் மாநகர மாவட்டச் செயலாளருமான பொள்ளாச்சி ஜெயராமன் மைக் பிடித்தபோது, தொண்டர்களிடையே உற்சாகம் கரைபுரண்டது. திமுக அரசை அவர் வறுத்தெடுத்த விதம் செம ‘ஷார்ப்’ ஆக இருந்தது.
அவர் பேசும்போது, “ஒரு அமாவாசை முடிந்து அடுத்த பௌர்ணமி வந்தால் எடப்பாடி ஆட்சி அமையும். இந்த 5 ஆண்டு காலத்தில் தமிழ்நாட்டு மக்கள் யாரும் நிம்மதியாக வாழவில்லை. தமிழ்நாட்டு மக்கள் யாரும் நிம்மதியாக எந்தத் தொழிலும் செய்ய முடியவில்லை. சுரண்டப்பட்டார்கள்! சுரண்டப்பட்டு ஒடுக்கப்பட்ட மக்கள், வாழ்வாதாரம் இழந்து சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள்,” என்று ஆவேசமாக முழங்கினார்.
தொடர்ந்து இளைஞர்களை நோக்கி ஒரு சபதத்தை முன்வைத்தார். “அதற்கெல்லாம் முடிவு கட்டி நாம் நடத்துகிற இந்த கடைசிப் போராட்டம் இது. இங்கே திரண்டிருக்கிற 25,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், இளம்பெண்கள், மாணவர்கள், மாணவிகள் ஒரு சபதம் எடுக்க வேண்டும்.
ஒரு ஓட்டு போனாலும் அது கருணாநிதி குடும்பத்திற்குப் போய்விடும். ஒவ்வொரு ஓட்டும் கருணாநிதியுடைய குடும்ப ஆட்சிக்கு வைக்கிற வேட்டாக அமைய வேண்டும்!” என்ற அவரது பேச்சு, தேர்தல் களத்தில் அதிமுக – பாஜக கூட்டணி எந்த அளவுக்கு திமுகவை தனிப்பட்ட ரீதியில் குறிவைக்கிறது என்பதைக் கோடிட்டுக் காட்டியது.
குப்பைக்கு வரி… மேயருக்கு குறி!
பொள்ளாச்சி ஜெயராமன் வெறும் மேடைப் பேச்சோடு நிறுத்திக்கொள்ளவில்லை. உள்ளூர் அரசியலையும் கையில் எடுத்து, திமுகவின் கோட்டையாகக் கருதப்படும் மாநகராட்சியைத் தட்டி எழுப்பினார். குறிப்பாக, திருப்பூர் மேயர் தினேஷ்குமார் மீதான அவரது விமர்சனம் ஆளுங்கட்சியினரை அதிர வைத்துள்ளது.
“திருப்பூர் மாநகராட்சி என்று ஒன்று இருக்கிறது. உலகத்திலேயே குப்பையே அள்ளாமல், குப்பைக்கு வரி போடுகிற மாநகராட்சி திருப்பூர் மாநகராட்சி. அதனுடைய மேயர் தினேஷ்குமார். நம்முடைய மக்கள் திமுககாரர்கள் ஓட்டு கேட்டு உங்கள் தெருவுக்கு வரும்போது நீதி கேட்க வேண்டும்… கேட்பீர்களா?” என்று அவர் கேட்டபோது, கூடியிருந்த ஆயிரக்கணக்கானோர் “கேட்போம்” என முழங்கியது மாநகராட்சி வட்டாரத்தில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தல் நேரத்தில் குப்பை வரி விவகாரம் திமுகவுக்குப் பெரிய தலைவலியாக மாறும் என்பதை அதிமுக – பாஜக கூட்டணி சரியாகக் கணித்து காய நகர்த்தியுள்ளது.
வெளியே சென்றாலே திரும்புவோமா என அச்சம்!
ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பாஜகவின் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், திமுகவின் நிர்வாகத் தோல்விகளைப் பட்டியலிட்டார். “திமுக அரசை வீட்டுக்கு அனுப்பவே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகப் பெண்கள் வெளியே சென்றால் திரும்ப வருவார்களா என்று அச்சப்படும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவாகவே இந்தத் தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம்,” என்றார் உறுதியுடன்.
வானதி சீனிவாசன் பேசும்போது “பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகிறது. திருத்தணியில் போதை இளைஞர்கள் பெண்களை வன்கொடுமை செய்துள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தில் என இந்த கொடுமை நடைபெற்று வருகிறது. அப்பா என சொல்லும் ஸ்டாலின் குடும்பத்தில் இது போல நடந்தால் கைது செய்யாமல் வேடிக்கை பார்ப்பாரா?” என்ற் ஆவேசமாக முழங்கினார்.

குற்றங்களை பட்டியலிட்ட வானதி!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 69 சதவீதம் அதிகரித்துள்ளது. குற்ற வழக்குகள் 169 சதவீதம் வழக்குகள் அதிகமாகி உள்ளது. வீட்டில் உள்ள பெண்களுக்கும் வீட்டு வன்முறை 40 சதவீதம் உயர்ந்துள்ளது. மதுவும் போதையும் தான் இதற்கு காரணம். இதனை கவனிக்க நேரமில்லாத நேரத்தில் இரண்டு சிறுவர்களை அழைத்து மு.க.ஸ்டாலின் ரீல்ஸ் போடுகிறார் என்ற வானதியின் பேச்சு காரநெடி ரகம், கூட்டத்தினரை சிந்திக்க வைத்தது.
வானதி தொடர்ந்து பேசுகையில், “கொங்கு மண்டலம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கோட்டை. ஸ்மார்ட் சிட்டி திருப்பூருக்கு மோடி அரசு அள்ளி அள்ளி கொடுத்தார். ஏனென்றால் திருப்பூர் முதலாளிகளும் தொழிலாளிகளும் சேர்ந்து உருவாக்கிய ஊர் இது. ஆனால் இங்கு குப்பை வரி சொத்து வரி என அனைத்தும் அதிகம். வரி அதிகம் பெறுவதால் தூய்மையாக இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை குப்பை நகரமாக திருப்பூர் விளங்கி வருகிறது” என்று திமுகவை கடுமையாக சாடினார்.
வானதியின் பேச்சு வரவேற்பை பெற்ற நிலையில், அவரைப் புகழ்ந்து பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “விவசாயிகள் கோரிக்கையானாலும், தென்னை விவசாயம் கோரிக்கையானாலும், ஜவுளி உற்பத்தியாளர் கோரிக்கையானாலும்… எதுவானாலும் பொறுமையாக இருந்து கட்சிப் பாகுபாடு பார்க்காமல் அந்தந்தத் துறை அமைச்சரைச் சந்திக்க வைத்துப் பேச வைக்கிறார் வானதி. நல்ல சிறப்பான, இயல்பான குணமுடையவர் வானதி சீனிவாசன்,” என்று சர்டிபிகேட் கொடுத்தார். இது கூட்டணியின் ஒற்றுமையை உரக்கச் சொல்வதாக அமைந்தது.
கூட்டணி பலம்: இது வெறும் ட்ரெய்லர் தான்!
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக, அதிமுக, அமமுக, தமாகா, பாமக, ஐஜேகே என தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முக்கியக் கட்சிகள் அனைத்தும் அணிவகுத்து நின்றன. திருப்பூர் குமரன் சிலையே அதிரும் வகையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுப்பிய முழக்கங்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் திருப்பூரில் நடந்த முதல் பெரிய அரசியல் ‘ஷோ’ என்பதால், மக்களின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியுள்ளது.
குப்பையிலிருந்து குடும்ப அரசியல் வரை, சட்டம் ஒழுங்கிலிருந்து போதைப்பொருள் புழக்கம் வரை என சகல திசைகளிலும் திமுகவைச் சுற்றி வளைக்கத் தொடங்கியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. இது தேர்தல் களத்தில் வாக்குகளாக மாறுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஆர்ப்பட்டம் மூலம், அடுத்த அதிரடிக்குத் தயார் போலிருக்கிறது திருப்பூர்!






