உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கு என்ன சின்னம்..? இன்று மாலை தெரியும்!!
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் இறுதிப் பட்டியல், அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சின்னம் பற்றிய விபரத்துடன் இன்று மாலை வெளியாகிறது.
தமிழகத்தில் 9 மாவட்டங்கள் தவிர்த்து 27 மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதி உள்ளாட்சிப் பதவிகளுக்கு வரும் 27, 30 தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிக்கு கடந்த 9-ந் தேதி முதல் 16-ந் தேதி வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 91,775 இடங்களுக்கு 3 லட்சம் பேர் வேட்பு மனு செய்திருந்தனர். இம்மனுக்கள் மீது பரிசீலனை முடிவடைந்த நிலையில், மனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
அதன் பின், போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டிய லும், அவர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்யும் பணியும் நடைபெறும். மாவட்ட மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிக்கு கட்சிகளின் அடிப்படையிலும் தேர்தல் நடைபெறுகிறது. இதனால், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் வேட்பாளர்கள் பெயர் அகர வரிசைப்படி முதலில் இடம்பெறும்.
அதன் பின் பதிவு பெற்ற கட்சிகளின் வேட்பாளர்கள் பெயரும், பின்னர் சுயேட்சைகளின் பெயரும் இடம் பெறும். அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் கட்சி தலைமை மூலம் அங்கீகாரம் பெற்ற ஏ மற்றும் பி வடிவங்களை வழங்கியிருக்கும் பட்சத்தில் அந்தந்த கட்சிக்கு உரிய சின்னம் ஒதுக்கப்படும். அதே போன்று பதிவு பெற்ற கட்சிகளுக்கும் மாநில தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ள சின்னம் வழங்கப்படும். சுயேட்சைகளுக்காக 30 சின்னங்கள் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே வேட்பு மனு தாக்கலின் போதே ஒவ்வொருவரும் தங்களுக்கு தேவைப்படும் சின்னங்களை குறிப்பிட்டிருப்பர். அதே சின்னத்தை வேறு யாரும் கேட்காத பட்சத்தில் அவரவர்க்கு ஒதுக்கப்படும். ஒரே சின்னத்தை இருவரோ அதற்கு மேற்பட்டோரோ கேட்டிருந்தால் குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும்.
ஊராட்சித் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர் பதவிக்கு கட்சி சாரா முறையில் தேர்தல் நடைபெறுவதால் அனைவருக்கும் சுயேட்சை சின்னங்களே ஒதுக்கப்படும்.
இவர்களுக்கு சின்னங்களை ஒதுக்கீடு செய்வது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் புதிய வழிகாட்டுதல் வழங்கியுள்ளது. இந்த இரு பதவிகளுக்கும் தலா 30 சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பிட்ட சின்னத்தை யாரும் கேட்க முடியாது. வேட்பு மனு வாபஸ் முடிந்தவுடன் தேர்தலில் போட்டியிட தகுதி பெற்ற வேட்பாளர்களின் பெயர் அகர வரிசைப்படி பட்டியலில் இடம்பெறும்.
பின்னர் அகர வரிசையில் எழுதிய வேட்பாளர் பெயரை, சீட்டில் எழுதி குலுக்கல் நடத்தப்படும் முதலில் வரும் வேட்பாளருக்கு, வரிசையில், முதலாவதாக உள்ள சின்னம் ஒதுக்கப்படும். இதே போன்று அடுத்தடுத்த சீட்டில் வரும் வேட்பாளர்களுக்கு பட்டியலில் உள்ள சின்னங்கள் வரிசைப்படி ஒதுக்கப்படும்.





