எஸ்.பி.பி.க்கு அஞ்சலி செலுத்த கூடிய கட்டுக்கடங்காத கூட்டம்… தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு அவசரமாக உடல் இடமாற்றம்!!
எஸ்.பி.பி. உடலுக்கு அஞ்சலி செலுத்த கட்டுக்கடங்காத கூட்டம் திரண்ட நிலையில், அவருடைய உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிற்கு கொண்டு செல்லப் பட்டது. நாளை காலை 11 மணிக்கு உடல் அடக்கம் நடைபெற உள்ள நிலையில், பொது மக்கள் அஞ்சலி செலுத்த அனுமதியில்லை என்று கூறப்பட்டுள்ளது.
மறைந்த எஸ்.பி.பி.யின் உடல் மருத்துவமனையிலிருந்து, மாலை 4 மணிக்கு நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு ஆம்புலன்சில் கொண்டு வரப்பட்டது. அங்கு பொது மக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. எஸ்.பி.பி.யின் திருமுகத்தை இறுதியாக காணவும், உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், அரசியல் பிரமுகர்கள், திரையுலகினர், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல கட்டுக்கடங்காத அளவுக்கு கூட்டம் திரண்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசாரும் திணறினர்.
இதனால் இரவு முழுக்க பொது மக்கள் அஞ்சலிக்கு எஸ்.பி.பி. உடல் வைக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்ட திட்டத்தில் திடீர் மாற்றம் செய்யப்பட்டது. இரவு 8 மணி அளவில் எஸ்.பி.பி. உடல் செங்குன்றம் அருகிலுள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அங்கு எஸ்.பி.பி.யின் உடலுக்கு அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள், நெருங்கிய நண்பர்கள், அரசியல் மற்றும் திரையுலக முக்கியப் புள்ளிகள் மட்டுமே அஞ்சலி செலுத்த அனுமதி என்றும், பொதுமக்களுக்கு அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்கு பண்ணை இல்ல வளாகத்தில் எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் நடைபெற உள்ளது.
இதற்கிடையே எஸ்.பி.பி உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.







