லடாக் : கலவரத்தை தூண்டியதாக போராட்டத் தலைவர் கைது!
லடாக்கில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சூழலியல் செயற்பாட்டாளர் சோனம் வாங்சுக் கைது செய்யப்பட்டார்.
ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370ஐ, கடந்த 2019 ஆகஸ்ட் 5 ஆம் தேதி மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. இதையடுத்து, அம்மாநிலம் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன.
இந்நிலையில், லடாக்கிற்கு மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6ஆவது அட்டவணையில் சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக், லே பகுதியில் உண்ணாவிரதம் இருந்தார். அதில் பங்கேற்ற இளைஞர்கள் மயங்கி விழுந்த நிலையில், உண்ணாவிரதப் போராட்டம் வன்முறையாக மூண்டது.
இதில், பாஜக அலுவலகத்தை தீ வைத்து கொளுத்திய போராட்டக்காரர்கள், காவல் துறையின் வாகனங்களையும் சேதப்படுத்தினர். போராட்டக்காரர்களை குண்டுக்கட்டாக காவல் துறையினர் கைது செய்த நிலையில், லே பகுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதுவரை 48 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களில் 40 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பதற்றமான இடங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த பாதுகாப்புப் படையினர், அப்பகுதிக்கு யாரும் செல்லாத வகையில் தடுப்புக் கம்பிகளை அமைத்துள்ளனர்.
இந்தச் சூழலில், சோனம் வாங்சுக்கின் தூண்டுதலின் காரணமாக வன்முறை நிகழ்ந்ததாக தகவல் பரவிய நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். முன்னதாக சோனம் வாங்சுக்கின் கல்வி நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவதற்கான உரிமத்தை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.





