--- --:--:-- --

காங்கிரஸ் கூட்டத்தில் கண் கலங்கியது ஏன்? கே.எஸ். அழகிரி விளக்கம்!

azhagiri

கண் என்று இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான். கண் இல்லை என்றால் கண்ணீர் வராது என்று, காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அழுதது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் கேஎஸ் அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.

 

திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுடனா தொகுதி உடன்படிக்கை இன்னமு கையெழுத்தாகவில்லை. கூட்டணி கட்சிகள் கேட்கும் தொகுதிகளைவிட குறைவான தொகுதிகளை ஒதுக்க திமுக முன்வந்ததால் இந்த இழுபறி நீடித்து வருகிறது.

 

இந்த விஷயத்தில் திமுகவின் மீது நீண்டநாள் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி, கடும் அதிருப்தியில் இருக்கிறது. தேசிய கட்சி என்பதை திமுக தலைமை மறந்துவிட்டு, உதிரிக் கட்சிகளுக்கு கிள்ளிக் கொடுப்பது போல் திமுக தலைவர்கள் நடந்து கொள்வதாக, காங்கிரஸ் கட்சியினர் குமுறுகின்றனர்.

 

கடந்த தேர்தலில், 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரசுக்கு, இம்முறை 20 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்று திமுக திட்டவட்டமாக உள்ளது; ஆனால், 30 தொகுதிகளுக்கும் குறைவாக இருந்தால் வேண்டாம் என்பது, பெரும்பாலான் காங்கிரஸ் தலைவர்களின் கருத்தாக உள்ளது.

 

கவுரவக் குறைச்சலான தொகுதிகளை ஒதுக்க முன்வந்தால், திமுக கூட்டணியில் இருந்து விலகி, மக்கள் நீதிமய்யம் போன்றவற்றுடன் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டுமென்ற குரல்களும் காங்கிரஸ் கட்சிக்குள் ஒலிக்கத் தொடங்கிவிட்டன. இதனிடையே, தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்கு, சென்னையில் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.

 

இக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தமிழகத் தலைவர் கே.எஸ். அழகிரி, “15 வருடமாக திமுக கூட்டணியில் நாம் இருந்து வருகிறோம். 100 தொகுதிகளில் திமுகவின் வெற்றிக்கு காங்கிரஸ் உறுதுணையாக இருக்கிறது. எனவே கவுரவமான எண்ணிக்கையில் தொகுதிகளை அவர்களே தருவார்கள் என எதிர்பார்த்தோம். தொகுதிகளின் எண்ணிக்கை குறைவு என்பதைவிட நம்மை நடத்திய விதம்….” என்று கூறி பேச முடியாமல் கண்கலங்கினார். இது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், சென்னையில் இன்று கேஎஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது :- இதுவரையில் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்த திமுகவிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை. திமுக வேட்பாளர்களுக்கான நேர்காணல் முடிந்த பிறகு மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும், என்றார்.

 

மேலும், செயற்குழு கூட்டத்தில் கண்கலங்கியது பற்றிய கேள்விக்கு, “கண் என்று இருந்தால் கண்ணீர் வருவது இயல்புதான். கண் இல்லை என்றால் கண்ணீர் வராது. திமுக மீது எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. தொகுதி பங்கீட்டில் காலதாமதம் ஏதும் நடக்கவில்லை. நேர்காணல் முடிந்தபிறகு, திட்டமிட்டபடி பேச்சுவார்த்தை நடக்கும்,” என்றார்.

Leave a Reply

Right Menu Icon