--- --:--:-- --

காதர்பேட்டை தீ விபத்து சதியா? இட உரிமையாளரின் நடவடிக்கையால் வலுக்கும் சந்தேகம்.. வாழ்வாதரமின்றி கடை உரிமையாளர்கள் பெரும் சோகம்!!

ùð÷

திருப்பூர் காதர் பேட்டையில் அண்மையில் நடந்த தீ விபத்தில் ஏராளமான பனியன் கடைகள் எரிந்து சாம்பலான நிலையில், அவற்றை சரி செய்து தர ஆர்வம் காட்டாத இட உரிமையாளரின் நடவடிக்கையால், தீ விபத்து திட்டமிட்ட சதியாக இருக்குமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியிருக்கிறது.

 

பின்னலாடை நகர் என்றும் டாலர் சிட்டி என்றும் அறியப்படும் திருப்பூரின் இதயப் பகுதியாக விளங்குகிறது காதர்பேட்டை. இங்கு, சுமார் 700க்கும் மேற்பட்ட மொத்த மற்றும் சில்லரை ஆடை வர்த்தகக் கடைகள் உள்ளன. இங்கு விதவிதமான வண்ணத்தில் வகை வகையான ஆடைகள், குழந்தைகள், சிறுவர், ஆண், பெண்களுக்கான அனைத்து ரகங்களில் இங்கு விற்கப்படுகின்றன. கோவை, ஈரோடு, சேலம், கரூர் போன்ற வெளி மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ராஜஸ்தான், குஜராத், ஒடிசா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த குறு, சிறு வர்த்தகர்கள் மற்றும் தொழிலாளர்கள் காதர்பேட்டையில் ஆடை ரகங்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

 

காதர்பேட்டையில் அமைந்துள்ள பனியன் பஜார் பகுதியில் மட்டும் ஏராளமான பனியன் கடைகள் இயங்கி வருகின்றன. அந்த பகுதியில் கடந்த ஜூன் 23ம் தேதி இரவு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 50 கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து சேதமடைந்தன. மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள விற்பனை மையத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், பெரும் பரபரப்பு நிலவியது.

தீ மளமளவென அருகில் இருந்த கடைகளுக்கும் பரவியதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்தது. தகவல் அறிந்து தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்தன. இதனிடையே, தகவல் அறிந்ததும், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ் நேரில் விரைந்து வந்தார். தானே களத்தில் இறங்கினார். அப்பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு, பெரும் போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். இதில் தீயணைப்பு வீரர்கள் மட்டுமின்றி அப்பகுதியை சேர்ந்த கடைக்காரர்களும் ஈடுபட்டனர். அதிர்ஷ்டவசமாக கடைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

 

முதல் கட்ட விசாரணையில், மின்கசிவு காரணமாக ஒரு கடையில் ஏற்பட்ட தீ , மளமளவென அனைத்து கடைகளுக்கும் பரவியதாகக் கூறப்பட்டது. இதனால், யாரும் விபத்தின் பின்னணி குறித்து பொருட்படுத்தவில்லை. ஆனால், அதன் பின்னர் நடந்த நிகழ்வுகளைப் பார்க்கும் போது காதர்பேட்டையில் நடந்த தீ விபத்து, திட்டமிட்ட ஒன்றாக இருக்கக்கூடுமோ என்ற சந்தேகத்தைக் கிளப்பியுள்ளது.

 

காதர்பேட்டையில் தீ விபத்துக்குள்ளான பகுதி, சுமார் 10 – 12 வருடங்கள் கருப்பையா என்பவரின் வசம் இருந்துள்ளது. அதன் பின் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, நவமணி ராஜேந்திரன் என்பவரின் வசம் கைமாறியுள்ளது. இவர், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்பந்தி என்றும் கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, தனது இடத்தில் உள்ள கடைகளை காலி செய்யும்படி நவமணி ராஜேந்திரன் கூறியுள்ளார். எனினும், வாழ்வாதாரம் பாதிக்கப்படுமோ என்ற கவலையில் கடை உரிமையாளர்கள் இருந்துள்ளனர்.

 

அதே நேரம், கடை உரிமையாளர்களுக்கு இடத்தை காலி செய்யும்படி அழுத்தம் கொடுத்தால், அவர்கள் வைத்துள்ள சங்கம் மூலம், பிரச்சனை பூதாகரமாகிவிடுமோ என்று நவமணி ராஜேந்திரன் கருதி, அந்த முடிவைக் கைவிட்டார். எனினும் வியாபாரிகள் யாரும் கடையை காலி செய்வதாகத் தெரியவில்லை. அவர்களை, எப்படி கடையை காலி செய்யச் சொல்வது என்று தெரியாமல் நவமணி ராஜேந்திரன் தீவிர யோசனையில் இருந்துள்ளார் . இந்த பின்னணியில் தான் தற்போது தீ விபத்து நடந்துள்ளது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

காதர்பேட்டையில் உள்ள கடைகளில் எப்போதும் சுமார் 3 – 5 லட்சம் ரூபாய் வரை சரக்குகள் இருப்பில் இருக்கும். தீ விபத்தில் சரக்குகள் எரிந்து சாம்பலானதால் வியாபாரிகள் நிலைகுலைந்து போயுள்ளனர். தகவல் அறிந்ததுமே, வியாபாரிகளுக்கு திருப்பூர் எம்.எல்.ஏ செல்வராஜ் கைகொடுத்து உதவியுள்ளார். கடைகளுக்கு தலா 50 ஆயிரம் வீதம் 50 கடைகளுக்கு நிவாரணம் வழங்கினார்.

 

அதே நேரம், இடத்தின் உரிமையாளர் நவமணி ராஜேந்திரன் இந்த விவகாரத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார். பாதிக்கப்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதரம் கருதி அடுத்த சில நாட்களிலேயே ஷெட் போட்டுத் தந்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படியெல்லாம் அக்கறை காட்டவில்லை. ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு காலி செய்யச் சொன்னவர், இப்போது ஷெட் அமைத்துத்தரவும் முன்வரவில்லை. தன் மீதான இந்த சந்தேகத்தை போக்க, இடத்தின் உரிமையாளர் நவமணி ராஜேந்திரன் , உடனடியாக தீ விபத்தில் பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு ஷெட் அமைத்து தந்து, தன் மீதான சந்தேகத்தைப் போக்க வேண்டும்; அல்லது, வியாபாரிகளுக்கு மாற்று இடம் கிடைக்கும் வரை இந்த இடத்திலேயே தற்காலிகமாக கடைகளை அமைத்து தொடர அனுமதிக்க வேண்டும் என்பதே வியாபாரிகள் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

எம்.எல்.ஏ செல்வராஜ்
எம்.எல்.ஏ செல்வராஜ்

உரிமையாளர்தான்
நடவடிக்கை எடுக்கணும்…

 

காதர்பேட்டை தீ விபத்து திருப்பூரில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த துயரமான காலகட்டத்தில் இருந்து வியாபாரிகள் உடனடியாக மீண்டு வருவது கடினமான காரியம். அரசியல் தலைவர்களும், பனியன் கம்பெனி உரிமையாளர்களும் தான் வியாபாரிகளுக்கு இந்த நேரத்தில் உற்ற துணையாக இருக்க வேண்டும்.

 

தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், வழக்கம் போல் மின்னல் வேகத்தில் வந்து மீட்புப் பணிகளை பார்வையிட்டதோடு, பாதிக்கப்பட்ட வியாபாரிகளுக்கு தற்காலிக நிவாரண உதவி வழங்கினார்.

 

இது குறித்து எம்.எல்.ஏ செல்வராஜ் கூறுகையில், “தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததுமே சம்பவ இடத்திற்கு சென்று பார்த்து தேவையான உதவிகளைச் செய்துள்ளேன். பாதிக்கப்பட்ட கடைக்காரர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் வழங்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு கடைகளை கட்டித் தர வேண்டியது கடமைதான். அதே நேரம், இது இடத்தின் உரிமையாளர் சார்ந்த விஷயம் என்பதால், மேற்கொண்டு தலையிட முடியவில்லை” என்றார்.

 

மேயர் தினேஷ்குமா
மேயர் தினேஷ்குமார்

திருப்பூர் மேயர் தினேஷ்குமாரிடம் கேட்டபோது, “காதர்பேட்டையில் தீ விபத்து நடந்த சமயத்தில் நான் வெளியூரில் இருந்தேன். இந்த விபத்து எதிர்பாராத சோகமான ஒன்று. அதே நேரம், பனியன் வியாபாரிகள் சம்மதித்தால், பனியன் சிட்டியை ஏற்படுத்தித் தர தயாராக இருக்கிறோம். அங்கு பனியன், பின்னலாடை வியாபாரங்களை வியாபாரிகள் மேற்கொள்ளலாம். இது குறித்த திட்டங்கள் கூட வகுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இந்த விஷயத்தில் வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தவும் தயார். அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும்” என்றார்.

 

அமைச்சர் சாமிநாதன்
அமைச்சர் சாமிநாதன்

இச்சம்பவம் குறித்து,  அமைச்சர் சாமிநாதன் கூறும்போது, திருப்பூர் காதர்பேட்டை தீவிபத்தில் சேதமான 50 கடைகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும். மாவட்ட ஆட்சியர் அறிக்கை தயாரித்து அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பார். வணிகர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் உடனே கடைகளை அமைக்கும் பணி தொடங்கப்படும்” என்றார்.


இப்போதைக்கு இல்லை…
நழுவும் இட உரிமையாளர்!

 

காதர்பேட்டையில் கடைகள் எரிந்து சாம்பலான பகுதியில் உரிமையாளர் நவமணி ராஜேந்திரனை, “குற்றம் குற்றமே” தரப்பில் அணுகி, அடுத்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டோம். அதற்கு அவரோ “இப்போதைக்கு ஒன்றும் செய்வதற்கு வாய்ப்பில்லை. இது குறித்து ஆலோசனை செய்துதான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பிடி கொடுக்காமல் பதிலளித்து, நழுவினார்.

 

இதன் மூலம், காதர்பேட்டையில் பாதிப்புக்குள்ளான கடை உரிமையாளர்களுக்கு, இனி அரசுத் தரப்புதான் உரிய உதவிகளைச் செய்து மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 

மேலும் பல விரிவான தகவல்களுடன் வரும் இதழில் பாா்ப்போம்….


 

Leave a Reply

Right Menu Icon