சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது,,! கர்நாடக காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு!! காரணம் என்ன?
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை தண்டனை காலம் முடியும் முன், நன்னடத்தையை காரணம் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்யக்கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் திடீர் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கும் கடிதம் எழுதியுள்ள தகவல் வெளியாகி பரபரப்பை அதிகரித்துள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிரான ஜெ. தரப்பு அப்பீல் மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி, அனைவரையும் விடுதலை செய்தார்.
ஆனால், விடுதலையை எதிர்த்த மேல் முறையீட்டு மனு மீது உச்ச நீதிமன்றம் கடந்த 2016 பிப்ரவரியில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது, இதில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை என குன்ஹா வழங்கிய தீர்ப்பை உறுதி செய்தது. அத்துடன், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு தலா 10 கோடி ரூபாய் கூடுதலாக அபராதமும் விதித்தது உச்ச நீதிமன்றம் .அபராதத்தை செலுத்தாவிட்டால் கூடுதலாக ஓராண்டு சிறைத் தண்டனை என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
இந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பு வெளியான காலகட்டத்தில் ஜெயலலிதா உயிருடன் இல்லை என்பதால், அவருக்கான தண்டனையும் அபராதமும் தேவையற்றதாகி விட்டது. தீர்ப்பையடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன் அக்ரஹார சிறையில் மூன்றரை ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவிக்கின்றனர்.
இந்நிலையில் நன்னடத்தை, விடுமுறை நாட்கள், ஏற்கனவே சிறையில் இருந்த நாட்களை கழித்து சசிகலா விரைவில் எந்நேரமும் விடுவிக்கப்படலாம் என்ற தகவல் சமீப நாட்களாக பரவி வருகிறது. ஏற்கனவே சுதந்திர தினத்தை முன்னிட்டு இம்மாதம் ஆகஸ்ட் 14-ந் தேதி சசிகலா விடுதலையாவார் என பாஜக பிரமுகர் ஆசீர் வாதம் ஆச்சாரி போட்ட டுவீட் பொய்த்து போனது.
இந்நிலையில் வரும் 28-ந் தேதி சசிகலா விடுதலை என ஒரு தகவல் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது தொடர்பாக பெங்களூரு சிறைத்துறை சார்பில் மத்திய அரசுக்கு மெயிலில் தகவல் அனுப்பப்பட்டதாகக் கூறி செய்தி உலா வருகிறது.
இதற்கிடையே , நன்னடத்தை எனக்கூறி சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்யக் கூடாது என கர்நாடக மாநில காங்கிரஸ் தரப்பில் எதிர்ப்பு எழுந்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு தலைவர் .முத்து மாணிக்கம் என்பவர் அம்மாநில முதல்வர் எடியூரப்பாவுக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பாகி யுள்ளது. அந்தக் கடிதத்தில் பெங்களூரு சிறையில் சசிகலா விதிமுறைகளை மீறி சிறப்பு சலுகைகளை அனுபவித்ததாக சிறைத்துறையின் முன்னாள் தலைவர் ரூபா குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த சிறப்புச் சலுகைகளைப் பெற பணம் கைமாறியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து கர்நாடக அரசின் உத்தரவின் பேரில் சிறப்பு விசாரணைக் குழு விசாரித்தது. அந்தக்குழு இன்னும் முழுமையான விசாரணை அறிக்கையை அரசிடம் அளிக்கவில்லை. இந்தச் சூழலில் எக்காரணம் கொண்டும் நன்னடத்தையை காரணம் காட்டி சசிகலாவை முன்கூட்டி விடுதலை செய்யக் கூடாது என கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் இன்னும் தேர்தலுக்கு ஆறேழு மாதங்கள் உள்ள நிலையில், சசிகலா முன் கூட்டி விடுதலையானால் அதிமுகவில் பெரும் பூகம்பம் வெடிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் பின்னணியில் பாஜக இருப்பதாகவே தெரிகிறது. சசிகலாவை வைத்து அதிமுகவில் ஒரு கேம் ஆட பாஜக திட்டமிட்டுள்ளது எனவும், இதனால் தான் தமிழக அரசியலில் 6 மாதத்தில் பெரும் திருப்பம் ஏற்படும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் கூறியுள்ளார் என்றும் பேச்சு நிலவுகிறது. இந்நிலையில் பாஜகவின் சூழ்ச்சியை அறிந்தே சசிகலாவை முன்கூட்டி விடுவிக்க கர்நாடக காங்கிரஸ் எதிர்ப்பு காட்டுவதாக தெரிகிறது.







