ஜார்க்கண்ட் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. 81 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த மாதம் 30 ஆம் தேதி முதல் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
65% வாக்குகள் பதிவான நிலையில் அவை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்படுகின்றன. ஜார்கண்டில் தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அந்த கட்சிக்கு பின்னடைவு ஏற்படுத்தும் என தெரிவிக்கின்றன.
இந்தியா டுடே மற்றும் ஆக்சிஸ் மை இந்தியா இணைந்து நடத்திய தேர்தல் கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 27 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 43 இடங்களிலும், பிற கட்சிகள் 11 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.
டைம்ஸ் நவ் நடத்திய கருத்து கணிப்பில் பாஜக 28 தொகுதிகளையும், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 44 இடங்களையும், பிற கட்சிகள் 9 தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரியவந்துள்ளது.
ஐஏஎன்சி வோட்டர் ஏபிபி நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களிலும், காங்கிரஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி 35 இடங்களிலும், மற்ற கட்சிகள் 14 இடங்களிலும் வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.






