--- --:--:-- --

ஐ.டி. நடத்திய திடீர் ரெய்டு..! அமைதி காக்கும் விஜய்…! ‘மாஸ்டர்’ படத்தில் ‘பாடம்’ கற்பிப்பாரா?

21

பிகில் பட சம்பளம், வசூல் தொடர்பாக நடிகர் விஜய்க்கும் சம்பந்தப்பட்ட படத்தயாரிப்பு நிறுவனம், பைனான்சியர் ஆகியோருக்கும் வருமான வரித்துறை கொடுத்த நெருக்கடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யிடம் ராப்பகலாக துருவித் துருவி விசாரித்தும், வீட்டில் ரெய்டு நடத்தியும் வருமான வரித்துறையினர் வெறும் கையுடனே சென்றுள்தாகவே தெரிகிறது. இந்த ரெய்டால் அலைக்கழிக்கப்பட்ட விஜய், 3 நாட்களாக அமைதி காப்பதும் ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், இதற்கெல்லாம் பதில் மாஸ்டர் படத்தில் கட்டாயம் இருக்கும் என்கின்றனர் அவரது ரசிகர்கள். இதனால் விஜய்யின் மாஸ்டர் படம் இப்போதே பெரும் எதிர்பார்ப்புக்கு ஆளாகியுள்ளது.

 

வருமான வரி ஏய்ப்பு தொடர்பாக கடந்த சில நாட்களாக தமிழகத்தில் உண்மையிலேயே சர்ச்சையானது சூப்பர் ஸ்டார் ரஜினி பற்றிய விவகாரம் தான். பல வருடங்களுக்கு முன் 2005-ல் ரஜினி மீது தொடரப்பட்ட வருமான வரி ஏய்ப்பு தொடர்பான வழக்கை கடந்த வாரம் குளோஸ் செய்தது ஐ.டி.துறை. இந்த வழக்கில் ரஜினி கொடுத்த விளக்கத்தில், வட்டிக்கு பணம் கொடுத்தேன்;வசூலாகாமல் நட்டப்பட்டேன் என்று கூறியிருந்தது அவருக்கு எதிரான விமர்சனங்களை எழுப்பியது. ரஜினி வட்டித் தொழில் செய்தாரா? எப்போது இதெல்லாம் நடந்தது? என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் ரஜினியோ, தெரிந்த நண்பர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுப்பது வட்டித் தொழில் என்று தெரியாது என மழுப்பினார். ரஜினியின் விளக்கத்தை ஏற்று அவர் மீதான வழக்கை வாபஸ் பெற்றது வருமான வரித்துறை .

 

இதே போல் தர்பார் படம் விவகாரம் தொடர்பாகவும் கடந்த வாரம் பெரும் சர்ச்சை கிளம்பியது. படம் சரியாக வசூலாகவில்லை. எங்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம். படத்தின் பட்ஜெட்டில் பாதிக்கு மேல் சம்பளமாக வாங்கிய ரஜினி தான் ஈடு கட்டணும் என விநியோகஸ்தர்கள் நெருக்கடி தர ஆரம்பித்தனர். ரஜினி வீட்டின் முன் 2 , 3 நாட்களாக விநியோகஸ்தர்கள் தவமிருந்தும் ரஜினி கண்டுகொள்ளவில்லை. ரஜினி வீட்டின் முன் குவிக்கப்பட்டிருந்த போலீஸ் மூலம் அவர்கள் துரத்தப்பட்டதும் ச ர்ச்சையானது. அது மட்டுமின்றி பெரியார் பற்றி தடாலடியாக கருத்து கூறியது, குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக பகிரங்கமாக கருத்து கூறிவிட்டு, எதிர்க்கட்சிகள் தான் போராட்டத்தை தூண்டி விடுகின்றன. போராட்டம் நடத்தும் மாணவர்கள் யோசிக்க வேண்டும் என அட்வைஸ் கூறியது போன்றவற்றால் ரஜினி பற்றிய சர்ச்சையாகவே பல நாட்கள் நகர்ந்தன.

 

இந்த நேரத்தில் தான் விஜய் நடித்து தீபாவளிக்கு வெளியான பிகில் பட வருமானம் தொடர்பாக வருமான வரித்துறையின் ரெய்டு பரபரப்பை கிளப்பியது. நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த விஜய்யை வலுக்கட் மாயமாக சென்னைக்கு அழைத்து வந்து அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அத்துடன் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கல்பாத்தி அகோகரம், பண உதவி செய்ததாக சந்தேகித்து பிரபல பைனான்சியர் மதுரை அன்புச் செழியன் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களிலும் ஐ.டி. சோதனை விறுவிறுப்பானது.

 

விஜய்யின் பண்ணை வீட்டில் கிட்டத்தட்ட 24 மணி நேரமாக சோதனை நடத்தியும், விஜய்யிடமும் இரவு பகலாக கிடுக்கிப்பிடி கேள்வி எழுப்பியும் வருமான வரி அதிகாரிகளுக்கு உருப்படியாக எதுவும் சிக்கவில்லை என்றே தெரிகிறது. பிகில் படத்துக்கு வாங்கிய சம்பளம் எவ்வளவு? என்பதிலேயே அதிகாரிகள் தீவிரம் காட்டியும், விஜய்யிடம் இருந்து தாங்கள் எதிர்பார்த்த பதிலை பெற முடியவில்லையாம். இதனால் வெறுங்கையுடன் போகக் கூடாது என நினைத்தனரோ என்னவோ? விஜய் வீட்டில் இருந்து 2 கிரிக்கெட் விளையாட்டு மட்டையுடன் ஐ.டி. அதிகாரிகள் வெளியேறினர்.

 

ஆனால், விஜய் தரப்பில் 24 மணி நேர விசாரணை, சோதனை நடத்திய ஐ.டி.அதிகாரிகள், பிகில் படத்தயாரிப்பாளர், பைனான்சியர் அன்புச் செழியன் ஆகியோர் தரப்பில் 3 நாட்களாக சோதனையைத் தொடர்ந்தனர். முடிவில் அன்புச் செழியனிடம் இருந்து 100 கோடி ரூபாய் வரை கணக்கில் காட்டாத பணம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியதாகவும், இதேபோல் படத்தயாரிப்பாளர் தரப்பிலும் ஏகப்பட்ட பணம், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஐ.டி. தரப்பு விவரமாக பட்டியல் வெளியிட்டுள்ளது.

 

தம்மை குறிவைத்து ஐ.டி. சோதனை நடத்தி வெறும் கையுடன் திரும்பிய நிலையில், மாஸ்டர் படப்பிடிப்புக்காக விஜய் மீண்டும் நெய்வேலிக்கு அமைதியாக கிளம்பி விட்டார். ஐ.டி.ரெய்டு குறித்து இதுவரை விஜய் எந்தக் கருத்தும் கூறவில்லை. ஆனால் இந்த ரெய்டு தமிழக அரசியல் களத்திலும், திரையுலகிலும் பெரும் பூகம்பத்தையே கிளப்பி விட்டுள்ளது எனலாம்.

 

ரஜினி பற்றிய சர்ச்சை செய்திகளை மடை திருப்பவே, விஜய் பக்கம் சோதனை என காங்கிரஸ், சீமான் என பலரும் கண்டனக்குரல் கொடுத்துள்ளனர். சீமான் கூறுகையில், விஜய் வாங்கும் சம்பளத்தை விட ரஜினி பல மடங்கு கூடுதலாக வாங்குகிறார். தர்பார் படத்துக்கு 126 கோடி ரூபாயை ரஜினி சம்பளமாக வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினியிடம் தான் ஐ.டி.விசாரித்திருக்க வேண்டும். ரஜினியை தப்பவிட்டு விஜய்யை குறிவைத்தது திசை திருப்பல் என சீமான் சாடியிருந்தார்.

 

ஆனால் பாஜக தரப்போ, ஐ.டி.ரெய்டை நியாயப்படுத்தியதுடன் விஜய்க்கு எதிராக அஸ்திரங்களை ஏவ ஆரம்பித்துள்ளனர். மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலி என்எல்சியில் நடத்த எப்படி அனுமதிக்கலாம்? என பாஜகவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதும் அதன் ஒரு கட்டம் தான். இதனால் கொந்தளிப்புக்கு ஆளான விஜய் ரசிகர்களும் படப்பிடிப்பு நடக்கும் நெய்வேலி என்எல்சி முன் குவிய பதற்றம் ஏற்பட்டு தடியடி வரை சென்றது.

 

இப்படி விஜய்யை குறிவைத்த ஐ.டி.ரெய்டால் பரபரத்துக் கிடக்கிறது தமிழகம். ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துக் கிடக்க அரசியல் கட்சிகள் சில விஜய்க்கு ஆதரவுக் கரம் நீட்ட, பாஜக தரப்போ விஜய்யை வம்புக்கிழுக்க என ஒரே பரபரப்பு தான். ஆனாலும் விஜய்யோ ஐ.டி.ரெய்டு குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் எந்த சலனமும் காட்டாமல் தனக்கே உரிய பாணியில் அமைதி காத்து வருகிறார்.

 

இதற்குக் காரணம் வழக்கம் போல படத்தில் விஜய் பதிலடி கொடுப்பார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். இதற்கு முன் தலைவா, மெர்சல், சர்க்கார் போன்ற Uடங்களில் மத்திய, மாநில அரசுகளையும், திட்டங்களையும் பகிரங்கமாக விஜய் விமர்சித்தது பெரும் புயலைக் கிளம்பியிருந்தது. அது போல் தற்போது விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில், தம்மை ஐ.டி. மூலம் சீண்டிப் பார்த்தவர்களுக்கு விஜய் தக்க பாடம் சுற்பிப்பார் என்கின்றனர் அவரது ரசிகர்கள். இதனால் மாஸ்டர் படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே எகிற ஆரம்பித்துள்ளது என்றே கூறலாம்.

Leave a Reply

Right Menu Icon