அரசியல் உள்நோக்கத்துடன் ஐ.டி. ரெய்டு நடக்கிறது: துரைமுருகன் குற்றச்சாட்டு!
அரசியல் உள்நோக்கத்தோடுதான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது; தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு நடத்த அதிமுக தூண்டுவதாக, திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
வரும் 6ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதையடுத்து கடும் வெயிலை பொருட்படுத்தாமல் அரசியல் தலைவர்கள் தீவிர பரப்புரை பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே நேரத்தில், தேர்தலை நேர்மையாக நடத்தவும், வாக்காளர்களுக்கு பணம், பரிசுப்பொருட்கள் மற்றும் மதுபானங்கள் கொடுப்பதை தடுக்கவும் தேர்தல் பறக்கும் படையினர், போலீசாருடன் இணைத்து, தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
உரிய ஆவணங்கள் இல்லாமல் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்படுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதுதவிர சந்தேகத்துக்கிடமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

அவ்வகையில், திருவண்ணாமலையில் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீடு, அலுவலகம், கல்வி நிறுவனங்கள், அறக்கட்டளை மற்றும் உறவினர்கள் வீடு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று சோதனை நடத்தியுள்ளனர். எ.வ.வேலுவின் சொந்த கிராமமான சே.கூடலூர் கிராமத்தில் உள்ள அவரது வீடு மற்றும் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் சோதனை நடைபெற்று வருகிறது.
வேலுவுக்கு சொந்தமான அருணை மருத்துவக்கல்லூரி, கம்பன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி, அருணை பொறியியல் கல்லூரி, ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் கிரானைட் தொழிற்சாலைகளும் வருமான வரித்துறையினரின் சோதனைக்கு தப்பவில்லை.
இந்நிலையில், இந்த சோதனைக்கு திமுக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. சென்னை கோட்டூர்புரத்தில் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தேர்தல் களத்தில் திமுகவை வீழ்த்த முடியாது என்பதால் இதுபோன்று வருமான வரித்துறை சோதனையை நடத்துகிறார்கள். அரசியல் உள்நோக்கத்தோடு வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது.
வருமான வரித்துறை சோதனை நடத்தினால் பயந்துபோய்விடுவார்கள் என்று மத்திய அரசு நினைக்கிறது. அரசியல் உள்நோக்கத்தோடுதான் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுகிறது; தோல்வி பயத்தால் பாஜகவை தூண்டிவிட்டு ஐடி ரெய்டு நடத்த அதிமுக தூண்டிவிடுகிறது. இதற்கெல்லாம் திமுகவினர் துவண்டுவிட மாட்டார்கள் என்று கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விடுத்துள்ள அறிக்கையில், வருமான வரித்துறையை ஏவி மிரட்டல் விடுக்கும் பா.ஜ.க. அரசின் அதிகார அத்துமீறல் கண்டனத்துக்குரியது என்று கூறியுள்ளார்.





