சபரிமலைக்கு செல்லவிடாமல் தடுப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்
சபரிமலைக்கு செல்ல தமக்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் அது நீதிமன்ற அவமதிப்பாகும் என்று சமூக செயற்பாட்டாளர் திருப்தி தேசாய் திட்டவட்டமாக கூறியுள்ளார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட கேரளாவில் 7 பெண்களுடன் திருப்தி தேசாய் முகாமிட்டுள்ளார்.
கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அரசியலமைப்பு சட்ட நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் அனைவரும் சமம் என்பதை வலியுறுத்தும் விதமாக சபரிமலைக்கு செல்வதாக தெரிவித்தார்.
தங்களது குழுவை தடுக்க நினைத்தால் நீதிமன்றத்தை நாட இருப்பதாக தெரிவித்த அவர் கேரள முதலமைச்சர் டிஜிபிக்கு தனது பயணம் தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறினார். இதனிடைய திருப்தி தேசாயின் பயணம் தொடர்பாக தங்களுக்கு தெரியாது என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
அவருடைய பயணம் தொடர்பாக கேரள அரசும், காவல்துறையும் முடிவு செய்யும் என தேவசம்போர்டு தலைவர் வாசு கூறியிருக்கிறார். அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதி அளித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு தந்தாலும் கடந்தாண்டு சபரிமலைக்கு செல்ல முயன்ற திருப்தி தேசாய் கொச்சி விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.





