மதில்மேல் பூனையாக விசிக..? அதிமுக மீது அக்கறை காட்டும் திருமா.. திமுக கூட்டணியில் மாற்றம் வருமா?
திமுக கூட்டணியில் இருந்து விலகும் பேச்சுக்கே இடமில்லை என்று திருமாவளவன் கூறிக் கொண்டெ, அதிமுக மீது அன்பை பொழிந்து வருகிறார். இதனால் அவர், கடைசி நேரத்தில் அணி மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. மதில் மேல் பூனையாக உள்ள திருமாவளவனின் அரசியல் கணக்கு என்னவென்பது தேர்தல் நெருங்கும்போது தெரிய வரும்.
திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் பரவலாக அறியப்பட்ட மாநிலக் கட்சி என்றால், அது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தான். படிப்படியாக அதிகரித்து வரும் விசிகவின் மக்கள் செல்வாக்கு, தமிழக அரசியலில் அவர்களை ஒரு தவிர்க்க முடியாத, கணிக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.
திமுக கூட்டணியில் விசிக ஒரு முக்கிய அங்கம் என்றாலும், அண்மைக் காலமாக அதிமுக – பாஜக கூட்டணியிலிருந்தும், நடிகர் விஜய் தலைமையிலான தவெக-விடமிருந்தும் அழைப்புகள் திருமாவளவனுக்கு விடுக்கும் அளவுக்கு, பட்டியலின மக்களின் நாயகனாக, ஒடுக்கப்பட்டோரின் குரலாக திருமாவளவன் உயர்ந்துள்ளார் என்பதை மறுக்க முடியாது.
திருமாவளவனின் சதுரங்க வியூகம்!
திருமாவுக்கு அரசியல் அரங்கில் அதிக மதிப்பு உள்ளது. நம்கமான தலைவர், தலித் மக்களின் காவலர் என்றெல்லாம் அவர் கருதப்படுகிறார். இதனால், அதிமுக மற்றும் தவெக தரப்பிலிருந்து திருமாவளவன் அணுகப்படுகிறார். இதனால் அவர் உள்ளுக்குள் மிகுந்த உற்சாகத்துடனும், புத்துணர்வுடனும் இருக்கிறார். இருப்பினும், அதிமுக கூட்டணியின் அழைப்பை திருமாவளவன் நிராகரித்துள்ளார்.
இதற்கு அவர் குறிப்பிட்ட காரணம், பாஜகவோ அல்லது பாமகவோ இருக்கும் கூட்டணியில் விசிக ஒருபோதும் இடம்பெறாது என்பதுதான். இதன்படி, பாஜகவோ அல்லது பாமகவோ ஒருவேளை அதிமுக அணியில் இடம்பெறாவிட்டால், அதிமுக அணியில் இடம் பெறுவதில் விசிகவுக்கு எந்தத் தவறும் இல்லை என்பதே திருமாவளவன் மறைமுகமாகச் சொல்லி இருக்கிறார். இது, அரசியல் வட்டாரங்களில் அனல் பறக்கும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.
எரிச்சலில் திமுக தலைமை!

திருமாவளவனின் இந்த வெளிப்படையான பேச்சை திமுக தலைமைக்கு எரிச்சலூட்டி இருக்கிறது. கூட்டணிக்குள் இருந்துகொண்டே எதிர்தரப்புக்குச் சாதகமாகப் பேசுவது திமுக தலைவர்களைக் கடும் அதிருப்தியில் உள்ளனர். சமீப காலங்களில் திருமாவளவன் அளித்த பேட்டிகளில், “அதிமுக எங்களுக்கு கொள்கை எதிரி அல்ல” என்று திரும்பத் திரும்பக் குறிப்பிட்டு வருவது, திமுக தலைமைக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
அதிமுக மீது எங்களுக்கு ஒரு தோழமை உணர்வு இருக்கிறது. அது பாழ்பட்டுவிடக் கூடாது, சிதைந்துவிடக் கூடாது என்கிற பொறுப்புணர்வோடுதான் இதைச் சுட்டிக்காட்டுகிறோம். உண்மையில் அதிமுக மீதோ, பழனிசாமி மீதோ எங்களுக்கு எந்தக் காழ்ப்பும் இல்லை என்று ஆணித்தரமாகவும், உறுதியாகவும் அடிக்கடி திருமாவளவன் பேசி வருகிறார்.
மேலும் அவர், “தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பேசுகின்ற இயக்கம். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற மக்கள் தலைவர்களை முன்னிறுத்தி இயங்குகிற இயக்கம் என்பதால் சில கருத்துக்களை நட்புணர்வோடுதான் முன்வைக்கிறோம். எங்களுக்கு பாரதிய ஜனதாவின் கொள்கைதான் பகை; அதிமுக அல்ல” என்றும் திருமாவளவன் அழுத்தமாகக் குறிப்பிட்டு, பாஜக சூழ்ச்சி செய்வதாக குற்றம்சாட்டினார்.
அதிமுகவுக்கு ஐஸ் வைக்கும் திருமா!
திமுக கூட்டணியில் இருந்து கொண்டே அதிமுகவுக்கு புகழாரம் சூட்டும் திருமாவளவன், முதல்வர் ஸ்டாலினுக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார். ஆனால், சமீப காலமாக அதிமுகவுடன் இயல்புக்கு மாறாக மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பது அரசியல் அரங்கில் கவனிக்கத்தக்க ஒன்றாக மாறியுள்ளது.
வேங்கைவயல் விவகாரத்தில், திமுக அரசு மீதும், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான காவல்துறை மீதும் திருமாவளவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். விசிக கட்சிக் கொடியை நட காவல்துறை உரிய அனுமதி தருவதில்லை என்று வருத்தப்பட்டார்.
இதுபோதாதென்று, “திமுகவுக்குச் செல்லும் ஒவ்வொரு நான்கு வாக்குகளில் ஒன்று விசிகவுடையதாக இருக்கும்” என்று முதல்வர் ஸ்டாலினை மேடையில் வைத்தே திருமாவளவன் அண்மையில் பேசினார். அதாவது, “திமுகவின் வெற்றிக்கு விசிகவின் தயவு மிக அத்தியாவசியம்; நீங்கள் வாங்கும் நான்கு வாக்குகளில் விசிகவுடைய ஒரு வாக்கும் இருக்கிறது. எங்களைக் குறைத்து மதிப்பிட வேண்டாம்” என்பதே இதன் மறைமுகப் பொருளாகும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்து.
எந்த பக்கமும் விசிக தாவலாம்
இப்படி, ஆளுங்கூட்டணியில் இருந்துகொண்டே எதிர்வரிசையில் இருக்கும் அதிமுக மீது பாசமழை பொழியும் திமுக அரசை விமர்சிப்பதையும் திருமாவளவன் வாடிக்கையாகக் கொண்டுள்ளார். இதெல்லாம், தேர்தல் கால சில முக்கியமான கணக்குகளுக்காக, அவர் இப்படி செயல்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசிக் கொள்கிறார்கள்.
வரும் தேர்தலில் திமுகவிடம் அதிகத் தொகுதிகளைக் கேட்டுப் பெற, இந்த தந்திரத்தை திருமா கையாள்வதாக கூறுகின்றனர். அதிமுக, தவெகவில் இருந்தெல்லாம் அழைப்பு வந்தும் திமுகவின் பக்கமே விசிக உறுதியாக நிற்கிறது. எனவே தங்களுக்கு அதிக இடங்களைக் கொடுங்கள் என்று திமுகவிடம் திருமாவளவன் கேட்கக்கூடும்.
பாமக தலைவர் ராமதாஸைத் தன் பக்கம் இழுக்கலாம் என்று ஸ்டாலின் மனதில் ஒரு திட்டம் இருப்பதாக அரசியல் அரங்கில் பரவலாகப் பேசப்படுகிறது. அந்த நேரத்தில் திமுக அணியிலிருந்து வெளியேறி விசிகவும் இந்த புதிய கூட்டணியில் இணைவது பற்றி யோசிக்கலாம். அப்போது எந்தச் சிக்கலும் வந்துவிடக் கூடாது என்பதற்காகவே, திருமாவளவன் அதிமுகவிடம் பாசம் காட்டுவதாகப் பேச்சு அடிபடுகிறது.
தேர்தல் களம் சூடுபிடிக்கும்போது இன்னும் பல வியூகங்கள் வெளிப்படலாம். அரசியல் களத்தில் இன்னும் பல திருப்பங்கள் காத்துள்ளன.





