--- --:--:-- --

இது என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா? – ஈபிஎஸ்

1

து என்ன தலைமைச் செயலகமா? தவெக தலைமை அலுவலகமா?”என கேள்வி எழுப்பிய அதிமுக கொறடாவாக இபிஎஸ் நியமித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, “சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை ஊக்குவித்தால், குதிரை பேரம், குதிரை வேகத்தில் நடைபெறும்” என்றும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் தவெக அரசு கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் போது அதிமுகவைச் சேர்ந்த 25 எம்.எல்.ஏ-க்கள் கட்சி கொறடாவின் உத்தரவை மீறி அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

 

இதனால் அதிர்ச்சியடைந்த இபிஎஸ் தரப்பு அவர்கள் மீது தகுதி நீக்க நடவடிக்கை கோரி சபாநாயகரிடம் மனு அளித்தது. இந்தச் சூழலில், அந்த அணியைச் சேர்ந்த மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்தியபாமா ஆகிய 3 எம்.எல்.ஏ-க்கள் தங்களது பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளனர். இந்நிலையில் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பது தொடர்பாக அதிமுக மூத்த தலைவர்கள் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரை நேரில் சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளனர்.

 

அந்தவகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளான அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஓ.எஸ். மணியன், தளவாய் சுந்தரம், இன்பதுரை உள்ளிட்டோர் இன்று தலைமைச் செயலகத்தில் சபாநாயகரைச் சந்தித்தனர். சபாநாயகருடனான சந்திப்பிற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, இந்த விவகாரத்தில் ஆளும் தவெக அரசுக்கும் சபாநாயகருக்கும் எதிராகக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

 

 

செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியதாவது:- “தவெக அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது, அதை எதிர்த்து வாக்களிக்குமாறு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்குக் கட்சித் தலைமை உத்தரவிட்டிருந்தது. ஆனால், கட்சியின் உத்தரவை மீறி தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த 25 எம்.எல்.ஏ-க்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதி நீக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ஏற்கனவே சபாநாயகரிடம் மனு அளித்திருந்தோம். அந்த மனு தற்போது சபாநாயகரின் ஆய்வில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.”

 

 

“இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின் (10th Schedule) கீழ் ஒரு நபர் மீது தகுதி நீக்க நடவடிக்கைகள் நிலுவையில் இருக்கும்போது, அவர்கள் அளிக்கும் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொள்வது சட்ட விதிகளுக்கு முற்றிலும் முரணானது. எனவே, அந்த உறுப்பினர்களின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதை சபாநாயகர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என மனு அளித்துள்ளோம்.”
தவெக மற்றும் சபாநாயகரின் செயல்பாடுகளைக் கடுமையாக விமரிசித்த அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்வதை அரசு ஊக்குவிப்பதாகக் குற்றம் சாட்டினார்.

 

 

“எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்த அடுத்த 5 நிமிடத்தில் அவர்களுக்குத் தவெகவின் கட்சி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதைப் பார்க்கும்போது, ‘இது தமிழக அரசின் தலைமைச் செயலகமா அல்லது தவெகவின் தலைமை அலுவலகமா?’ என்ற நியாயமான கேள்வி எழுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களின் இத்தகைய ராஜினமாக்களை சபாநாயகர் ஊக்குவித்தால், தமிழகத்தில் குதிரை பேரம் குதிரை வேகத்தில் நடைபெறும் அபாயம் உள்ளது” என அவர் எச்சரித்தார்.

Leave a Reply

Right Menu Icon