ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் செலவில் எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்
ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் நிமிடத்திற்கு ஒரு ரூபாய் செலவில் பயன்படுத்தக்கூடிய எலக்ட்ரிக் இருசக்கர வாகன சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயிலில் தினமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்கின்றனர்.
பயணிகள் வசதிக்காக ஷேர் ஆட்டோ, வாடகை சைக்கிள் உள்ளிட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் 16 ரயில் நிலையங்களில் மினி பேருந்து வசதியும் உள்ளது. இந்த நிலையில் ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் முதன்முறையாக ரயில் பயணிகளை கவர சாவி இல்லாத சுற்றுச்சூழலுக்கு உகந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன சேவையை மெட்ரோ நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்த சேவையை நிமிடத்திற்கு ஒரு ரூபாய் செலவில் பெறமுடியும் என்றும், இதனை செல்போன் செயலி மூலமாக முன் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனத்தை எடுத்துச் செல்பவர் எங்கு செல்கிறார் என்பதை கண்காணிக்கும் வசதியும் உள்ளதாக இதை இயக்கும் தனியார் நிறுவன ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது 6 வாகனங்கள் மட்டுமே நிறுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் 15 வாகனங்கள் ஆக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டபின் பயணிகள் தங்களது லைசென்ஸ் மற்றும் புகைப்படங்களை மட்டும் பதிவு செய்தால் வாகனத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஆலந்தூர் ரயில் நிலையத்தில் வாகனத்தை எடுக்கும் பயணி ஒருவர் தமது தேவை முடிந்ததும் அதனை அருகில் உள்ள பெற்றோரை நிலையத்தில் ஒப்படைக்க வசதியும் செய்யப்பட்டுள்ளது. இதனால் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சேவைக்கு ரயில் பயணிகள் இடையே வரவேற்பு எழுந்துள்ளது.
பயணிகளின் வரவேற்பை பொருத்து கிண்டி, வடபழனி உள்ளிட்ட மற்ற மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என மற்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.





