புதிய விதிமுறைகளுக்கு இடைக்காலத் தடை: சுப்ரீம் கோர்ட் உத்தரவு
கல்வி நிலையங்களில் சாதியப் பாகுபாடுகளைக் களைய யு.ஜி.சி. கொண்டு வந்த புதிய விதிகளுக்கு எதிராக பல மனுக்கள் தாக்கலான நிலையில், உச்ச நீதிமன்றம் யு.ஜி.சி-யின் புதிய விதிகளுக்கு இடைக்காலத் தடை விதித்தது. மேலும், நிபுணர்களைக் கொண்டு புதிய விதிமுறைகளை மாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி உள்ளிட்ட அடிப்படையிலான பாகுபாடுகளைக் கையாள்வதற்காகப் பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி) இந்த விதிகளை அறிவித்திருந்தது. புதிய யு.ஜி.சி விதிகளின்படி, பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் ‘சமத்துவக் குழுக்களை’ அமைக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டிருந்தது.
உயர்கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான பாகுபாடுகள் குறித்து 2026-ம் ஆண்டு யு.ஜி.சி வெளியிட்ட விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது. நாட்டின் உயர்கல்விக்கான ஒழுங்குமுறை அமைப்பான பல்கலைக்கழக மானியக் குழு (யு.ஜி.சி), கல்வி நிறுவனங்களில் சாதி ரீதியான பாகுபாடுகளைத் தடுப்பதற்காக இந்த விதிகளை வெளியிட்டிருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட புதிய யு.ஜி.சி விதிகளின்படி, அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் பாகுபாடு தொடர்பான புகார்களை விசாரிக்க ‘சமத்துவக் குழுக்களை’ அமைக்க வேண்டியது கட்டாயமாகும். யு.ஜி.சி (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துதல்) விதிகள் 2026-ன் படி, இந்தக் குழுக்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (ஓ.பி.சி), பட்டியல் சாதியினர் (எஸ்.சி), பழங்குடியினர் (எஸ்.டி), மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் இடம்பெற வேண்டும்.
இந்த விதிகளின் வரைவு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் மக்களின் கருத்துக்காக வெளியிடப்பட்டது. 2012-ம் ஆண்டு யு.ஜி.சி விதிகளை அமல்படுத்துவது குறித்து ரோஹித் வெமுலா மற்றும் பாயல் தத்வி ஆகியோரின் தாயார்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிய விதிகளைச் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த வரைவு வெளியிடப்பட்டது. வெமுலா மற்றும் தத்வி ஆகியோர் முறையே 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் சாதிப் பாகுபாடு காரணமாகத் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
இறுதி விதிகளில், வரைவு அறிக்கையில் இருந்த ‘தவறான புகார்கள்’ தொடர்பான பிரிவு நீக்கப்பட்டுள்ளது. அந்தப் பிரிவில் அபராதம் அல்லது ஒழுங்கு நடவடிக்கைக்கான அம்சங்கள் இடம் பெற்றிருந்தன.
2012-ம் ஆண்டு விதிகளில் இருந்த மொழி மற்றும் இனம் சார்ந்த பாகுபாடுகள் குறித்த வரையறைகள், புதிய வரைவில் விடுபட்டிருந்தது குறித்து மாணவர்கள் மற்றும் அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். அகில இந்திய ஓ.பி.சி மாணவர்கள் சங்கமும், சமத்துவக் குழுக்களில் ஓ.பி.சி பிரிவினர் சேர்க்கப்படாதது மற்றும் ‘சாதிப் பாகுபாடு’ என்ற வரையறையில் ஓ.பி.சி விடுபட்டது குறித்துச் சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட விதிகளில், ‘சாதிப் பாகுபாடு’ என்ற வரையறையில் ஓ.பி.சி பிரிவினர் சேர்க்கப்பட்டனர். 2012-ம் ஆண்டு விதிகளில் ‘துன்புறுத்தல்’ மற்றும் ‘பாதிக்கப்படுதல்’ ஆகியவற்றுக்கான வரையறைகள் இருந்தன. அவை வரைவு அறிக்கையில் நீக்கப்பட்டிருந்தன, தற்போது அறிவிக்கப்பட்ட விதிகளிலும் அவற்றுக்கு இடம் கிடைக்கவில்லை.
முந்தைய விதிகள் உயர்கல்வி நிறுவனங்களில் ‘சம வாய்ப்பு மையங்கள்’ அமைக்க வழிவகை செய்திருந்தன, ஆனால் அவற்றின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்துத் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை.





