--- --:--:-- --

எஸ்.பி.வேலுமணி மீண்டும் நிரூபிப்பாரா?

2

மிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. தலைமையில் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், அ.தி.முக. கூட்டணியில், பா.ஜ.க, பா.ம.க (அன்புமணி), த.மா.க உள்ளிட்ட முக்கிய கட்சிகள் இணைந்துள்ளனர்.

 

கடந்த தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி கொங்கு மண்டலத்தை தவிர மற்ற இடங்களில் தோல்வியை சந்தித்தது. இந்த கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க.வின் முக்கிய தலைவராக இருப்பவர் தான் எஸ்.பி.வேலுமணி கொங்கு மண்டலத்தின் வலிமையான அரசியல் சக்தியாக இருக்கும் இவர், ஒரு சாதாரணத் தொண்டனாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, இன்று அக்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னணி தலைவராக மாறியுள்ளார். அ.திமு.க ஆட்சியில் அமைச்சர் பொறுப்பிலும் இருந்துள்ளார்.

 

கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூரை அடுத்த சுகுணாபுரம் கிராமத்தில் பிறந்த எஸ்.பி.வேலுமணி, 1990-களின் தொடக்கத்தில் எம்.ஜி.ஆர் ரசிகர் மன்றத்தின் ஒரு சாதாரண உறுப்பினராகத் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். அதன்பிறகு, அதிமுகவின் அப்போதைய மாவட்டச் செயலாளர் கே.பி.ராஜூவின் அறிமுகம் கிடைத்ததை தொடர்ந்து, மறைந்த முதல்வர் ஜெயலலிதா கோவை வந்தபோது அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளித்ததன் மூலம் அவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

 

தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று குனியமுத்தூர் நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ்.பி.வேலுமணி, அரசியலில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து 2006-ம் ஆண்டு அவர் தனது முதல் சட்டசபை தேர்தலை சந்தித்தார். இதுவரை 4 முறை எஸ்.பி.வேலுமணி சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளார்.

 

2006-ம் ஆண்டு பேரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவே எஸ்.பி.வேலுமணி சந்தித்த முதல் சட்டசபை தேர்தல் ஆகும். முதல்முறையாக சட்டமன்றத் தேர்தலில் களம் கண்டார். அப்போதைய பேரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதன்முறையாக எம்.எல்.ஏ-வாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார்.

 

தொகுதி மறுசீரமைப்பிற்குப் பிறகு பேரூர் தொகுதி நீக்கப்பட்ட நிலையில், 2011-ம் ஆண்டு தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். இந்த தேர்தலில், 62.40% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமைச்சராகும் வாய்ப்பைப் பெற்றார்.

 

தொடர்ந்து 2016 சட்டசபை தேர்தலில், மீண்டும் தொண்டாமுத்தூர் தொகுதியில் களம் கண்ட எஸ்.பி.வேலுமணி, இம்முறை சுமார் 64,041 வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தார்.

 

ஜெயலலிதா இறந்தை தொடர்ந்து பா.ஜ.க. கூட்டணியுடன் 2021- தேர்தலை சந்தித்த அ.தி.மு.க.வுக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், கொங்கு மணடலத்தில் வெற்றியை பதிவு செய்தது. இங்கு 3-வது முறையாக தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட்ட எஸ்.பி.வேலுமணி, சுமார் 41,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபித்தார்.

 

அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் மிக முக்கியமான துறைகளைக் கையாண்ட அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, 2011-ம் ஆண்டு தேர்தலில் பெற்ற வெற்றியை தொடர்ந்து, சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற்றார். ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளில் சாலை வசதிகளை மேம்படுத்தியதில் இவரது பங்கு முக்கியமானதாக இருந்தது. இடையில் சட்டத்துறை அமைச்சராகவும் கூடுதல் பொறுப்பு வகித்தார்.

தற்போது எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க.வில் முக்கிய பொறுப்பில் இருக்கும் எஸ்.பி.வேலுமணி, கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவராகவும், கொங்கு மண்டலத்தில் கட்சியின் நிதி மற்றும் தேர்தல் வியூகங்களை வகுப்பவராகவும் இருக்கிறார். கட்சி தொண்டர்களால் தொண்டாமுத்தூர் சிங்கம் என்று அழைக்கப்படும் எஸ்.பி.வேலுமணி, 2021- தேர்தலில் அ.தி.மு.க. பெரும் பின்னடைவை சந்திதபோதும், தனது தொகுதியில் பெரிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

 

2026 தேர்தலில் மீண்டும் அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி இணைந்துள்ள நிலையில், எஸ்.பி.வேலுமணி மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டு தனது செல்வாக்கை நிரூபிப்பாரா என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

Right Menu Icon