டெல்லியில் காற்று மாசை தடுக்கும் விதமாக தனி நபர் கண்காணிப்புக்குழு அமைப்பு..!
டெல்லியில் காற்று மாசை தடுக்கும் விதமாக பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர் கழிவுகள் எரிப்பை கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதி மதன் பி லோக்கூரை உச்சநீதிமன்றம் நியமித்தது. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை எரிப்பதால் டெல்லியில் ஏற்படும் கடும் காற்று மாசை தடுக்க உச்ச நீதிமன்ற உத்தரவுகளை பிறப்பித்தும் நிலைமை சீராகவில்லை.
இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த விவகாரத்தை பார்வையிட உச்ச நீதிமன்றத்தின் ஓய்வுப் பெற்ற நீதிபதி மதன் பி லோக்கூரை அவர்கள் நியமித்தனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநில தலைமை செயலாளர்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் லோகூருக்கு அனைத்து உதவிகளையும் செய்து தர உத்தரவிட்டனர்.
அந்தந்த மாநிலங்களில் நிதி உதவியும் என்சிசி, என்எஸ்எஸ் ஆகிய பிரிவுகளையும் பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் பயிர் கழிவுகள் எரிப்பு பற்றி 15 நாட்களில் அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் துரிதமாக செயல்படுவதால் தனி நபர் குழு அமைக்கக் கூடாது என்று கூறி மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் மறுப்பதை நீதிபதிகள் நிராகரித்தனர். வழக்கின் விசாரணையை வரும் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.







