பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்ற பாகிஸ்தான் – இந்திய ராணுவம் குற்றச்சாட்டு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலடியாக, ’ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாதிகள் முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதன்பிறகு, இந்தியாவின் மேற்கு எல்லையில் டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் கொண்டு பாகிஸ்தான் தாக்குதல் நடத்த முயன்றது. அவற்றை தடுத்து நிறுத்தி இந்திய படைகள் தாக்கி அழித்தன.
இதைத் தொடர்ந்து, அமெரிக்கா தலையிட்டதால் சண்டையை நிறுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன. இதனை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முதலில் அறிவித்தார். பின் இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் சண்டை நிறுத்தத்தை அறிவித்தன. சண்டை நிறுத்தம் அறிவித்த அன்றே இந்தியா – பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் 12ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தும் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இன்று, இரு நாடுகள் இடையே பேச்சுவார்த்தை துவங்கி நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் முப்படை அதிகாரிகள் ஏர் மார்ஷல் ஏ.கே. பார்தி, லெஃப்டினன்ட் ஜெனரல் ராஜீவ், வைஸ் அட்மிரல் பிரமோத், மேஜர் ஜெனரல் ஷர்தா ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது; “பாகிஸ்தான் ராணுவம் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நின்றது. தீவிரவாதிகளின் பிரச்சனையை பாகிஸ்தான் ராணுவம் தனது பிரச்சனையாக மாற்றுகிறது. இந்தியாவின் போர் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள், அவர்களின் கட்டமைப்புக்கு எதிரானது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் போக்கை மாற்றி வருகிறது. போர் நிறுத்தத்தை பாகிஸ்தான் மீறினால், அதற்கு பதிலடி கொடுப்பது இந்தியாவின் கடமை.பாகிஸ்தானின் தாக்குதலை தடுக்க பல அடுக்கு பாதுகாப்புகள் உள்ளன. இந்தியாவின் பழைய ராணுவ தளவாடங்கள் கூட தாக்குதலின்போது மிகச் சிறப்பாக செயல்பட்டன. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆகாஷ் இந்தியாவிற்கு சிறந்த வான் பாதுகாப்பு அமைப்பாக விளங்குகிறது.
இந்திய வான் பாதுகாப்பு அமைப்புகளால் இந்தியாவுக்கு குறைந்த அளவே பாதிப்பு. சீனாவின் ஏவுகணைகளை தான் இதுவரை பாகிஸ்தான் பயன்படுத்தி வந்தது. ஆனால், தற்போது சீனாவில் உருவாக்கப்பட்ட டிரோன்களையும் பாகிஸ்தான் ராணுவம் பயன்படுத்துகிறது. பாகிஸ்தான் ஏவிய ஏவுகணை பாகங்கள் நம்மிடம் உள்ளன. அவை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
பயணிகள் விமானத்தையும், ராணுவ டிரோன்களையும் பிரித்துப் பார்க்கும் தொழில்நுட்பம் இந்தியாவிடம் உள்ளது. இந்தியாவின் பன்னடுக்கு வான் பாதுகாப்பு அமைப்பை பாகிஸ்தானால், ஊடுருவ முடியவில்லை. வழிபாட்டுத் தலங்கள், பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்கியது. எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையும், சர்வதேச எல்லையையும் தாண்டாமல் இந்தியா பதில் தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தானின் முக்கிய 11 விமானப்படைத் தளங்களை இந்திய விமானங்கள் தாக்கின. சீனாவின் PL 15E ரக ஏவுகணைகளை இந்தியப் படைகள் சிதறடித்தன. சீனா கொடுத்த ஆயுதங்கள் பாகிஸ்தானுக்கு கைக்கொடுக்கவில்லை.முப்படைகளும் ஒருங்கிணைந்து ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக நடத்தியுள்ளன. பாகிஸ்தானின் அத்துமீறலை இந்திய ராணுவம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. பாகிஸ்தானின் அத்துமீறலை எதிர்கொள்ள இந்தியாவின் அனைத்து ராணுவப் பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” எனத் தெரிவித்தனர்.





