லடாக் எல்லை பிரச்சனையில் இந்தியா-சீனா இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை..!
லடாக் பகுதிகளை எல்லை பிரச்சனை தொடர்பாக இந்தியா – சீனா இடையே ராணுவ உயரதிகாரிகள் நிலை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. எல்லை பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது தொடர்பாக இருநாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே நடைபெறும் இந்த ஏழாவது சந்திப்பு இம்முறை லடாக்கின் சுசுல் என்ற இடத்தில் நடக்கிறது.
கிழக்கு லாடாக்கை ஒட்டிய பகுதியிலிருந்து இரு தரப்புப் படைகளும் ஒரே நேரத்தில் பின்வாங்குவது மட்டுமே சரியான முடிவாக இருக்கும் என இந்திய தரப்பில் வாதம் வைக்கப்பட உள்ளது.
இந்த கூட்டத்தில் இந்திய தரப்பில் முன்வைக்க வேண்டிய வாதங்களை மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் முப்படை தளபதிகள் அடங்கிய குழு நேற்று முன்தினம் இறுதி செய்தது.
எல்லையில் பதற்ற சூழல் நிலவும் நிலையில் அங்கு இந்தியா தனது போர் விமானங்கள் மூலம் கண்காணித்து வருவதுடன் பீரங்கிகள் உள்ளிட்ட கனரக ஆயுதங்களையும் நிறுத்தியுள்ளது. வீரர்களுக்கான குளிர்கால அவசிய பொருட்களும் அதிக அளவு இருப்பு வைக்கப்பட்டு வருகின்றன.







